ஏழரையை கிளப்பிய 110 : முறுக்கும் ஸ்டாலின்..!! மிரளும் எடப்பாடி..!!

 
Published : Jun 16, 2017, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
ஏழரையை கிளப்பிய 110 : முறுக்கும் ஸ்டாலின்..!! மிரளும் எடப்பாடி..!!

சுருக்கம்

stalin vs edappadi about 110 law

எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தல் அல்லது எதிர்கட்சிகளை வெளியேற்றுதல் இந்த இரண்டுக்கும் நடுவில்தான் தமிழக சட்டசபை சுழன்று கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட வெளிநடப்பு படலம் துவங்குவதற்கு முன் கிடைக்கும் ப்ரீத்திங் டைமில் சில சிக்ஸர்களை அடிக்க ஸ்டாலின் தவறுவதில்லை. 

இப்படித்தான் நேற்று 110 விதியை மையமாக வைத்து ஆளுங்கட்சி வீசிய பந்துக்களையெல்லாம் துவம்சம் செய்துவிட்டு கிரவுண்டை விட்டு வெளியேறியிருக்கிறார். 

அதாவது...தி.மு.க. எம்.எல்.ஏ.வான பொன்முடி நேற்று சபையில் ‘110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் செயல்படாமல் உள்ளன. ஆறு வருடங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்திற்கு இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறீர்கள். இப்படித்தான் இருக்கிறது 110ல் அறிவித்த திட்டங்கள் நடைமுறையாகும் வேகம்.’ என்று பெரிய பட்டாசு ஒன்றை பற்ற வைத்தார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய முதவர் எடப்பாடி, “2011 முதல் 2016 வரை 110 விதியின் கீழ் 879 அறிவிப்புகள் (அம்ம்ம்ம்ம்மாடியோவ்...) வெளியிடப்பட்டன. இவற்றில் 872 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது (அம்புட்டுதேன்...). இவற்றில் 557 பணிகள் நிறைவடைந்துள்ளன (எதெல்லாம் சொல்லுங்க பாப்பம்...) 315 பணிகள் நடந்து வருகின்ற (ஏங்க நடந்து வருது, கொஞ்சம் ஓடி வரச்சொல்லுங்களேன்...).

மாண்புமிகு அம்மா அவர்கள் அனைத்து திட்டங்களையும் அவரது அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.” என்று  என்று ரமணா விஜயகாந்த் போல் புள்ளிவிபரங்களை கொட்டினார். 

உடனே ஸ்டாலின், “திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் வரவேற்கலாம். ஆனால் பெரும்பாலான பணிகள் நடைபெறவில்லை. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை  வழங்குங்கள்.” என்று கேட்க, முதல்வரோ “எந்த திட்டம் நிறைவேறவில்லை என்பதை சுட்டிக்காட்டுங்கள். அதை நிறைவேற்றுகிறோம்.” என்றார். அப்போதும் விடாத ஸ்டாலின் “ எது நிறைவேற்றப்பட்டது என்கிற பட்டியலை தந்தால்தானே நிறைவேறாத திட்டங்களை சொல்ல முடியும்? வெறும் எண்ணிக்கையை கூறாமல் முழு விபரங்களை வெள்ளை அறிக்கையாக தாருங்கள்.” என்று கொக்கி போட்டார்.

உடனே குறுக்கிட்ட மின்சார துறை அமைச்சர் தங்கமணி “110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றியதால்தான் மக்கள் மீண்டும் அம்மாவை முதல்வராக்கினர்.” என்று சொல்லி பெருமைப்பட்டார். ஆனால் உடனே ஸ்டாலின் ”நிறைவேறாத திட்டங்களை பற்றி கேள்வி கேட்கத்தான் 89 பேரான எங்களை எம்.எல்.ஏ.வாக்கி அனுப்பியுள்ளனர்.” என்று திருப்பியடிக்க எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டு கொண்டாடினர். ஆளுங்கட்சிக்கு செம அப்செட்.

மீண்டும் முதல்வர் தலையிட்டு இந்த அரசு சாதனை அரசு, அதைத்தான் புள்ளிவிபரமாக கூறியுள்ளோம்...என்று பத்திரம் வாசித்து அமர, சபாநாயகரோ “முதல்வர் விளக்கமாக கூறியுள்ளார். இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்வோம்.” என்று திரையை போட்டுவிட்டார். 

ஆனால் எதிர்கட்சியினரோ ‘110 விதியின் கீழ் ஜெ., அறிவித்ததெல்லாம் பம்மாத்து வேலைகள். தன் அரசு பற்றிய மெகா பிம்பத்தை மக்கள் மத்தியில்  உருவாக்க அவர் செய்த பிளான் அது. அதைப் பற்றி அடிக்கடி கேட்டு அந்த மாய பிம்பத்தை தகர்த்து எறிவோம்.” என்று சபதமிட்டுள்ளனர்.

நேற்று 110 விதிகள் பற்றிய விவாதத்தின் போது ஒரு சுவாரஸ்யம் நடந்தது. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக  ஒரு அறிக்கையை தன் கையில் வைத்தபடி முதல்வர் வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்டாலின் அதை மறுத்து விவாதம் ஆரம்பமானதும் ‘அந்த அறிக்கையை நீங்களே வெச்சிருந்தா எப்படி? எங்ககிட்ட கொடுங்க அப்போதானே உண்மை நிலை தெரியும்!” என்று துரைமுருகன் கேட்க, சட்டசபை செயலர் மூலம் அந்த அறிக்கையை ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டார் முதல்வர்.

அதில் வெறும் புள்ளிவிபரங்கள் மட்டும் இருந்திருக்கின்றன. ஸ்டாலின் இதுபற்றி பேச எழுந்ததும், “முதல்வர் பெருந்தன்மையோடு ஆவணத்தை தந்துள்ளார். எனவே இது குறித்து இனி பேச வேண்டாம்.” என்று தனபால் முடித்து வைத்துவிட்டார்.

இந்த சூழலில் தான் கொடுத்த ஆவணத்தை முதல்வர் திரும்ப தரும்படி ஸ்டாலினை கேட்க, ஸ்டாலினும் அதை ஒப்படைத்துவிட்டார். 

110விதியின் கீழ் திட்டங்கள் நிறைவேறிவிட்டதாக சொல்லி பெருமைப்பட நினைத்த ஆளுங்கட்சிக்கு எதிராக ஸ்டாலின் படை திரட்டி நின்று ‘வெள்ளை அறிக்கை கொடுங்கள்” என்று கேட்பதால் இதை ஒரு ஏழரையாகவே பார்க்கிறது எடப்பாடி அரசு. 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்