அடிச்சுத் தூக்கும் ஸ்டாலின்... கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சர் திமுகவில் ஐக்கியம்..?

By Asianet TamilFirst Published Jul 5, 2021, 10:01 PM IST
Highlights

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

அமமுகவில் இருந்து பலரும் திமுகவுக்குத் தாவிவிட்டனர். செந்தில்பாலாஜி, தங்கதமிழ்செல்வன், கலையரசன் எனத்தொடங்கி தற்போது தருமபுரியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாகி தற்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார். இதேபோல சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த  தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவில் ராஜ்ய சபா பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் கட்சியிலும் அவருக்கு நல்ல பதவி கிடைத்தது. கலைராஜனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மாநில அளவிலான கட்சி பொறுப்பில்தான் உள்ளார்.
இந்நிலையில் கட்சியில் புதிதாக இணைந்த பழனியப்பனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. எனவே, தருமபுரியில் கட்சியைப் பலப்படுத்தும் வகையில் பழனியப்பனுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் வரிசையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலமும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாசலம் ஜெயலலிதா அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் அவர் சேர்க்கப்படாததால் அதிருப்தியில் இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு அதிமுகவில் சீட்டு கொடுக்கப்படாததால், பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இதனால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து சொச்ச வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றார்.
தற்போது அரசியலில் பிடிமானம் இல்லாமல் இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம், செந்தில்பாலாஜி மூலம் திமுகவில் சேர முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் கொங்கு மண்டலம் திமுகவுக்கு தொடர்ந்து சவாலாக இருப்பதால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் சேர அக்கட்சியும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, தோப்பு வெங்கடாச்சலத்தை திமுகவில் பார்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!