மோடி ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது... கார்த்தி சிதம்பரம் அட்டாக்..!

By Asianet TamilFirst Published Jul 5, 2021, 9:32 PM IST
Highlights

பிரதமர் மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது பண முறைகேடு புகார் தெரிவித்த கட்சியினர் நீக்கப்பட்டனர். அவர்கள் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்தனர். அப்போது கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார். “ஒன்றிய அரசு என்பது சரியான வார்த்தைதான். யூனியன் என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றியம் என்றுதான் அர்த்தம். அதனால், அதிமுக சொல்லும் கருத்து தவறானது. தற்போது பொருளாதாரம் பல மடங்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதனால் தற்போது இந்தியாவுக்கு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. அதற்கு தலைமை தாங்கத் தகுதியான இயக்கம் காங்கிரஸ் கட்சி மட்டுமே.
மற்ற எல்லா நாடுகளிலும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டிதான் உள்ளது. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு விதமான ஜிஎஸ்டி உள்ளது. அதையும் அடிக்கடி மாற்றுவதால் மக்கள் குழப்பம் அடைந்துகிடக்கிறார்கள். பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு வரி வருவாய் குறைந்துவிட்டது. அதனால் 130 கோடி மக்களையும் வரி செலுத்த வைக்க பெட்ரோல், டீசல் மீது அதிக வரியை விதிக்கிறார்கள்.
செஸ் வரி வசூலித்தால் மாநிலங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை. பிரதமர் மோடி அரசு இருக்கும் வரை பெட்ரோல், டீசல் விலை குறையாது. தமிழகத்தில் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பாஜக. அக்கட்சியின் சித்தாந்தத்தை தமிழக மக்கள் ஏற்கவில்லை. 10 ஆண்டுகளாகச் செயலற்று கிடந்த தமிழகத்தைச் சீர் செய்ய 60 நாட்கள் நிச்சயம் போதாது. தமிழகத்தில் உள்ள குளறுபடிகளைத் திமுக அரசு நிச்சயமாக சரி செய்யும்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
 

click me!