முதல்வர் வேட்பாளராக துரைமுருகனை அறிவிப்பாரா ஸ்டாலின்..? ஜெயக்குமார் அதிரடி கேள்வி..!

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2020, 11:21 AM IST
Highlights

திமுக பொருளாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக பொருளாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிப்பாரா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124-வது பிறந்த தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நேதாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘’துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவியை விட்டுத் தரத் தயாரா என முதல்வர் பழனிசாமிக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் அடிமட்டத் தொண்டன் கூட கொடி கட்டிய காரில் வர முடியும். நாங்களெல்லாம் மிட்டா மிராசுதாரர்கள் அல்ல. எங்களுக்கென்று பெரிய பாரம்பரியம் கிடையாது. ஆனால், நாங்களெல்லாம் கொடி கட்டிய காரில் பவனி வருகிறோம் என்று சொன்னால், அதிமுகவும், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்தான் காரணம். அதிமுகவில் கடைக்கோடி தொண்டன் கூட முதல்வராகலாம் என முதல்வர் கூறினார். அதற்கு சாட்சியாகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். கிளைச்செயலாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி இன்றைக்கு முதல்வராக இருக்கிறார் என்றால், அந்த அளவுக்கு அதிமுகவுக்கு உழைத்ததன் காரணமாக முதல்வராக உயர்ந்திருக்கிறார்.

திமுகவில் இது சாத்தியமா? பல ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்த துரைமுருகன், ஏன் திமுக தலைவராக வரவில்லை? திமுக தலைவர் ஸ்டாலின் அதனை விட்டுக்கொடுப்பாரா? துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிப்பாரா? திமுகவில் இது சாத்தியமில்லை.

திமுகவில் தந்தை, மகன், பேரன் என தலைவர் பதவி தொடரும். இப்போது உதயநிதிக்கு ஒரு பேரன் வந்தால் அவர் தான் தலைவர் எனத் தொடரும். ஆனால், அதிமுகவில் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற அடிப்படையில் முதல்வர் இக்கருத்தைச் சொல்லியிருக்கிறார். க்ளைமாக்ஸைப் பாருங்கள் என்கிறார் ஸ்டாலின். க்ளைமாக்ஸில் ஹீரோதான் ஜெயிப்பார். வில்லன்கள் ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அதிமுகதான் ஹீரோ. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் கிளைமாக்ஸில் நாங்கள் தான் முழு வெற்றி பெறுவோம்’’எனத் தெரிவித்தார்.

click me!