ஒரே அறிவிப்பில் வன்னிய மக்களை கவர்ந்த முதல்வர் ஸ்டாலின். சட்டமன்றத்தில் வானளவு புகழ்ந்த ஜிகே மணி, வேல்முருகன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2021, 1:35 PM IST
Highlights

அது யாராலும் மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது. சமூகநீதிக்காக தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

1987 ஆம் ஆண்டு 20% உள் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான 21 சமூகநீதி போராளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என  தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு. 

இதுகுறித்து முதல் அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதாவது,  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே... 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன். சமூகநீதி கொள்கையின் தாய்மொழியாக விளங்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். வகுப்புரிமை, வகுப்புவாரி உரிமை, இட ஒதுக்கீடு, சாதிரீதியான ஒதுக்கீடு என்று எந்த பெயரைச் சொல்லி அழைத்தாலும் அதற்கு சமூக நீதி என்ற ஒற்றைச் சொல் கொடுக்கும் பொருளை வேறு எந்தச் சொல்லும் தருவது கிடையாது. அத்தகைய சமூக நீதிக் கொள்கை தான் திராவிட இயக்கம் இந்த தமிழ்ச் சமூகத்திற்கு கொடுத்த மாபெரும் கொடையாகும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்திய ஒன்றியத்திற்கு அந்த தத்துவத்தை திராவிட இயக்க வழங்கியது வகுப்புரிமை. (Communal G.O) முறையை நூற்றாண்டுக்கு முன் நடைமுறைக்குக் கொண்டு வந்தது நீதிக்கட்சி தான்.

மூடப் பட்டுக் கிடந்த கல்வி, வேலைவாய்ப்பு, அதிகார பதவிகள் அனைத்தும் அதன் மூலமாக அனைவருக்குமானது, சுதந்திர இந்தியாவில் அதற்கு சட்டரீதியான இடர்பாடு வந்தபோது தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து முன்னெடுத்த போராட்டம்தான் அது. அந்தப் போராட்டம் இந்திய துணைக்கண்டத்தில் கவனிக்க வைத்தது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் அதனை அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் இடத்திலேயே வலியுறுத்தியதன் காரணமாக இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைக்கு இந்திய அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. அப்படி சமூக நீதியை அடைய பல்வேறு போராட்டங்களை நடத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம். பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு உரிய இட ஒதுக்கீட்டினை உறுதிப்படுத்தியது. காலத்தின் தேவைக்கேற்ப அளவு மாற்றம் பெற்று தந்ததும் கடந்த அரை நூற்றாண்டு கால வரலாற்றிலேயே இருக்கக்கூடிய சரித்திரச் சான்று ஆகும். 

அது யாராலும் மறைக்க முடியாத சாசனமாக அமைந்திருக்கிறது. சமூகநீதிக்காக தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கோரி வட தமிழகத்தில் நடந்த போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் போராட்டத்தில் அன்றைய அரசின் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களில் 21 சமூகநீதி போராளிகளான அவர்களுடைய உயிர்த் தியாகத்துக்கும், போராட்டத்திற்கும் நியாயம் வழங்கும் வகையில் 1989ஆம் ஆண்டு அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசு இந்தியாவிலேயே முதல் முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை அமைத்துக் கொடுத்து. அவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கி, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சம வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அது அவர்களுடைய முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்து தந்தது. 

சமூகநீதி கொள்கையின் தொடர்ச்சியாக, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்படக்கூடிய நம்முடைய அரசியல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தினர் 10.5% விழுக்காடு தனி ஒதுக்கீட்டினை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த இருக்கிறது. ஒடுக்கப்படும் சமுதாயம் எதுவாக இருந்தாலும், அதன் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உயர்ந்த நோக்கமாகும். அத்தகையவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து 1987 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் பலியான 21 சமூகநீதிப் போராளிகளின் தியாகத்தை மதிக்க கூடிய வகையில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் அறிவிப்புச் செய்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதி. இது யார் மறந்திருந்தாலும் நிச்சயம் நான் மறக்கவில்லை, யாரையும் மறக்க மாட்டேன். நான் சமுதாயத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவன், மிகவும் பின்தங்கிய வகுப்பினர்  பட்டியலில் என் வகுப்புக்கு ஓர் இடம் உண்டு, நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதால் பின்தங்கிய வகுப்பினர் நலனுக்காக என் உயிரை பணயமாக வைத்து போராடுவேன். என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன வாசகம் இது.அந்த உறுதி மொழியை நாம் ஏற்றுக்  கொண்டுள்ளதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு என இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என அவர் கூறுகையில், இந்த அறிவிப்பை  பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.கா மணி,  மற்றும் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வரவேற்று பேசினர்.

 

click me!