சென்னை ஏரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது - குடிநீர் பஞ்சம் பயமுறுத்துகிறார் மு.க.ஸ்டாலின்

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 06:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
சென்னை ஏரியில் ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது  - குடிநீர் பஞ்சம் பயமுறுத்துகிறார் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மாநகரின் பல பகுதிகளில் அதிகாலையில் குடிநீர் கிடைப்பதில்லை.

 வட சென்னையில் கிடைக்கும் குடிநீரும் பல இடங்களில் சாக்கடை கலந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.  உள்ளாட்சி அமைப்புகள், மொத்த நுகர்வோர், தொழிற்சாலைகள் என மொத்தம் 67.27 லட்சம் மக்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் வழங்கி வருகிறது.

மக்களுக்கு லாரிகளில் குடிநீரை சப்ளை செய்து விட்டாலே தங்கள் பணி நிறைவு பெற்று விட்டதாக எண்ணும் அதிமுக அரசு, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் குறித்து வெற்று “110 அறிவிப்புகளை” வெளியிட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 இது ஒருபுறமிருக்க நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு குறைந்து தற்போது ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே ஏரிகளில் கையிருப்பு இருக்கும் மிக மோசமான நிலை ஏற்பட்டு விட்டது. 

இதற்கிடையில் கடந்த அக்டோபர் முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீரை திறந்து விடுவதாக அறிவித்தது. ஆனால் அப்படி திறந்து விட்ட தண்ணீரும் வழியில் ஆந்திர மாநில விவசாயிகளால் உறிஞ்சி இழுக்கப்பட்டதால், இதுவரை சென்னை மாநகரத்திற்கு 336 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் மட்டுமே கிடைத்துள்ளது.

 அதையும் கூட இப்போது ஆந்திர மாநில அரசு நிறுத்தி விட்டது. இது பற்றி தமிழக அரசின் அதிகாரிகளோ, துறை அமைச்சரோ கவலைப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை மாநகர மக்கள் குடிநீருக்கு கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வேலுமணி தஞ்சாவூர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார். 

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட அதிமுக அமைச்சருக்கோ, அரசுக்கோ இப்பிரச்சினையின் முக்கியத்துவம் புரியவில்லை. 

குறைந்த பட்சம் அறிவித்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளை தூர் வாரி, மழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமித்து வைக்க அதிமுக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் சென்னை மாநகர மக்கள் இப்படியொரு குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

ஆந்திர மாநிலத்திலிருந்து 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரைப் பெற வேண்டும். சென்னை மாநகர குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டியது முதல் கடமை  நினைவுபடுத்த விரும்புகிறேன்

PREV
click me!

Recommended Stories

TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?