உங்களுக்கு திமுக துணை நிற்கும்..! கொரோனாவால் பலியான மருத்துவர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின்..!

By Manikandan S R SFirst Published Apr 23, 2020, 9:10 AM IST
Highlights

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைந்த மருத்துவர் சைமனின் மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலை தெரிவித்த ஸ்டாலின் அவர்களுக்கு எந்நாளும் திமுக துணை நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த சைமன் ஹெர்குலிஸ் என்கிற மருத்துவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.  தீவிர சிகிச்சையில் இருந்த அவர் 3 நாட்களுக்கு முன்பாக மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு மயானத்திற்கு சென்றபோது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவசர அவசரமாக மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து பலியான மருத்துவரின் உடலை புதைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. தமிழக முதல்வர் இச்சம்பவத்திற்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியிருந்தார். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்தநிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறைந்த மருத்துவர் சைமனின் மனைவியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆறுதலை தெரிவித்த ஸ்டாலின் அவர்களுக்கு எந்நாளும் திமுக துணை நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திமுக தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் மனைவி ஆனந்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும், நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் ஊடகத்துறை நண்பர்ளையும் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!