
யார் யாரோ முதலமைச்சர் பதவிக்கு வந்து போவதால், நானும் முதலமைச்சராக வேண்டுமா? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது என திமுக. செயல் தலைவர் ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என வலியிறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து புதுக்கோட்டைமாவட்ட விவசாயிகள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தனர். அப்போது அவர் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதி அளித்தார்.
ஆனால் நேற்று முன்தினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் அமைச்சர் கையெழுத்திட்டார்.இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பாத்தம்பட்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை திமுக. செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த ஸ்டாலின், எடப்பாடி அரசு மக்களுக்கு கொடுத்த எந்த உறுதிமொழியையும் செயல்படுத்தவில்லை என குற்றம்சாட்டினர்.
ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் பொது மக்களுக்கு திமுக துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவிக்கு யார் யாரோ வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் , இதை வைத்து பார்க்கும் போது நானும் முதலமைச்சர் பதவிக்கு வர வேண்டுமா? என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.