மாரிசன் மான் வேடம் எல்லாம் மக்களிடம் நீண்ட நாட்கள் நிலைக்காது - பன்னீரை வறுத்தெடுத்த க.பொன்முடி

First Published Mar 29, 2017, 7:24 PM IST
Highlights
Dmk Ex Minister open letter to o.pannerselam


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணையில் ஓ.பன்னீல்செல்வமும் உட்படுத்தப்படும் காலம் விரைவில் வரும் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த சசிகலா, நடராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நேரடியாக பதிலளிப்பதில்லை. அதற்கு மாற்றாக கட்சியில் உள்ள இளம் எம்.எல்.ஏ.க்களையும், மூத்த அமைச்சர்களை விட்டே அவர் பதிலடி அளித்து வருகிறார். நடராஜனை  திமுக எம்.எல்.ஏ. ராஜாவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும் அறிக்கையால் வறுத்தெடுத்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது முன்னாள் அமைச்சர் க.பொன்முடியும் இணைந்துள்ளார்.

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வதற்கு, திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு..

முன்னாள் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நேற்றைய தினம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சைப் பார்த்து மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டு விட்டது. மறைந்த ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணம் குறித்து பதவி போன பிறகு “தியானம்” செய்து, “பேட்டி” கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது ஏன் அது பற்றி வாய் திறக்கவில்லை என்பதுதான் நேற்று அடுக்கடுக்காக மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளின் அடிப்படை நோக்கம்.

ஆனால் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கேட்ட கேள்விகளுக்கு பதில்  சொல்ல வக்கில்லாத திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மு.க.ஸ்டாலினைப்பார்த்து “கோடை வெயிலின் உச்சத்தில் பேசுகிறார்” என்று குதர்க்கமாக கூறியிருப்பது அநாகரிகமான அரசியல் பேட்டியின் உச்சமாகும்! அரசியலில் என்னதான் நாகரீகமான முறையில் கருத்து பரிமாற்றங்களை செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சித்தாலும் திரு. ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு இப்படி கீழ்த்தரமான விமர்சனத்தை மட்டுமே வைக்கத் தெரியும் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

விவாதங்களில் நாகரீகத்திற்கும், அவர் வளர்ந்த அரசியலுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது வைத்துள்ள தனது கொச்சையான விமர்சனத்தின் மூலம் திரு ஓ. பன்னீர்செல்வம் அரங்கேற்றியிருக்கிறார். “மணல் மாபியா சேகர் ரெட்டிக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று வீராப்பாக கூறும் திரு ஓ. பன்னீசெல்வத்தை தென் மண்டல சி.பி.ஐ. இணை இயக்குநர் திரு எம். நாகேஸ்வரராவ் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கே சென்று முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அவர்களிடம் 18.1.2017 அன்று ஏன் விசாரணை நடத்தினார்? அதுவும் சேகர் ரெட்டியின் மீது ரெய்டு நடந்தவுடன் ஏன் சி.பி.ஐ. இணை இயக்குனர் அவரை சந்தித்தார்? இப்போதாவது திரு ஓ.பி.எஸ். அவர்கள் உரிய விளக்கம் தர முடியுமா?

“முதல்வர் பதவியிலிருந்த போது ஏன் விசாரணை கமிஷன் அமைக்க கோரவில்லை” என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு “கடைசி வரை அம்மா நல்லா இருக்காங்க என்று எனக்கு சொல்லப்பட்டது” என்று இப்போது கூறும் திரு ஓ.பன்னீர்செல்வம், திடீரென்று பதவி போன பிறகு “மரணத்தில் மர்மம்” என்ற சுயநல கோஷத்தை முன் வைத்தது ஏன் என்பதுதான் மு.க.ஸ்டாலின் முக்கியக் கேள்வி. இந்த கேள்விக்கு மட்டுமல்ல மு.க.ஸ்டாலின் நேற்று எழுப்பிய எந்தக் கேள்விக்கும் திரு ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்ல முடியாமல் தவித்ததை பத்திரிகையாளர் சந்திப்பில் என்னால் கண்டு ரசிக்க முடிந்தது.

"அவருடையை இன்றைய பேட்டியை முழுவதும் கேட்டால் ஒரேயொரு கருத்துதான் தமிழக மக்களுக்கு- ஏன் குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஊர்ஜிதமாகிறது. “பெரா அணி”க்கு தலைமை தாங்கும் டி.டி.வி. தினகரனும், “ சேகர் ரெட்டியின் மணல் மாபியா” அணிக்கு தலைமை தாங்கும் ஓ. பன்னீர் செல்வம் அணியும் கைகோர்த்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தார்கள் என்ற தளபதியின் குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையாகியிருக்கிறது."

'"ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு இருக்கலாம். அவரை தன் கட்டுப்பாட்டில் ஆடாமல் அசையாமல் வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜனுக்கும் பீதி ஏற்பட்டு இருக்கலாம். ஆர்.கே. நகர் தேர்தலில் “ஆல் அவுட்” ஆகி விட்டால், அரசியல் அஸ்தமனம் ஆகி விடுமே என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் பெங்களூர் குற்றவாளி சசிகலாவின் மீது இருக்கும் மக்களின் வெறுப்பிலும், அதிமுக தொண்டர்களின் வெறுப்பிலும் திரு ஓ. பன்னீர்செல்வம் குளிர் காய நினைத்து “டெல்லி போர்வையுடன்” பவனி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரிக்க வேண்டும் என்பதில் தனக்கு தனி அக்கறை இருப்பது போல் பச்சை வேடம் போடுகிறார். இந்த மாரிசன் மான் வேடம் எல்லாம் மக்களிடம் நீண்ட நாட்கள் நிலைக்காது என்பதே மு.க.ஸ்டாலின் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதிலிருந்து தெரிகிறது."

'தமிழகத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளி மாபாதகச் செயலை செய்தவர் தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த திரு ஓ. பன்னீர்செல்வம் தான் என்பதை ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.   முதலமைச்சர் பதவியிலிருந்து திரு. ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்த போது தமிழகத்தின் கடன் 3.14 லட்சம் கோடி ரூபாய். இதை இல்லையென்று அவரால் மறுக்க முடியுமா? இப்படியொரு கடன் சுமையை ஒவ்வொரு தமிழன் தலையிலும் ஏற்றி வைத்த அவர் தனது மூன்று முறை முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு உருப்படியான திட்டத்தை நிறைவேற்றியதாக பதில் சொல்ல முடியுமா? நிதி நிலைமை குறித்து சட்டமன்றத்தில் விளக்கம் சொல்லி விட்டேன் என்று மழுப்பான பதிலை “பதவி” மயக்கத்தில் இருக்கும் ஓ.பி.எஸ். அவர்கள் கூறியிருக்கிறார்."

"ஆனால் இந்த மோசமான நிதி மேலாண்மைக்கும், நிர்வாக சீர்கேடுகளுக்கும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி விவகாரத்திற்கும் தனியாக ஒரு விசாரணை கமிஷனை ஓ.பி.எஸ். அவர்கள் சந்தித்தே தீர வேண்டும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அரசு விரைவில் அமையத்தான் போகிறது. மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியது போல் “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் மர்ம மரணம் குறித்த விசாரணை கமிஷனை நிச்சயம் அமைப்பார் ” என்பதை தெரிவித்துக் கொள்ளும் இந்த நேரத்தில், அந்த விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக திரு டி.டி.வி. தினகரனின் “பெரா அணியும்” திரு ஓ.பி.எஸ். அவர்களின் “மணல் மாபியா சேகர் ரெட்டி அணியும்” தயாராகவேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் க.பொன்முடி தெரிவித்துள்ளார்."

click me!