
போலீஸ்சார் அனைவரும் தங்களின் “ வொர்க்கிங் ஸ்டெயிலை” மாற்ற வேண்டும். போலீசைப் பார்த்து சமூக விரோதிகளும், ரவுடிகளும்தான் பயப்பட வேண்டும், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வர வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக டோஸ்விட்டு அறிவுரை வழங்கினார்.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி 15 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக பொறுப்புஏற்ற கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறார். நாள்தோறும் உத்தரவு, சீர்திருத்த நடவடிக்கைகள் என உத்தரப்பிரதேச மாநிலத்தை தலைகீழாக மாற்றி வருகிறார்.
பசுவதைக்கு தடை, சட்டவிரோத இறைச்சிக் கடைகளுக்கு சீல், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் “ஆன்ட்டி ரோமியோ படை” என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இருந்தும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி வருகிறது.
இந்நிலையில், கிரேட்டர் நெய்டாவில், ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்டது, சாந்த் கபீர் நகரில் நாட்டுவெடிகுண்டு வீச்சு என சில சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து தலைநகர் லக்னோவில் நேற்று போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் ஆதித்யநாத் ஏற்பாடு செய்து இருந்தார். அந்த கூட்டத்தில் போலீசாருக்கு ஆலோசனைகளையும், அதேசமயம், போலீசிடம் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி முதல்வர் ஆதித்யநாத் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்தயநாத் பேசியதாவது:
போலீசார் முதலில் தங்கள் வேலை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களின் வேலை முறையைப் பார்த்து பொதுமக்களுக்கு ஒருவிதமான பாதுகாப்பு உணர்வும், சமூக விரோதிகளுக்கும், ரவுடிகளுக்கும் அச்சமும் உண்டாக வேண்டும். போலீசார் அனைவரும் ஊழல், லஞ்சத்தில் சிக்காமல் இருக்க வேண்டும்.
போலீசார் மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு கண்டிப்பாக பேச வேண்டும். ஒரு சின்ன அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால்கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைத்தொடர்ந்து வேறு எந்த சம்பவமும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விசயத்தையும் செய்வதற்கு முன் போலீசார் விரிவாக ஆலோசனை நடத்தி, அதற்கு ஒரு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். மிகமுக்கியமாக போலீசார் கள ஆய்வுக்கு அடிக்கடி சென்று, உண்மையான சூழல் என்ன, சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை நேரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
போலீசார் தங்களின் கடுமையான வேலைச்சுமைக்கும் இடையே, நாள்தோறும் தங்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில், தங்களின் சக அதிகாரிகளோடு அணிவகுப்பு நடத்த வேண்டும். இந்த அணிவகுப்பு என்பது, மக்கள் மத்தியில் ஒரு விதமான பாதுகாப்பு உணர்றை உண்டாக்கும்.
போலீசார் தங்கள் துறைகளுக்கு உள்ளே பணியாற்றும் கருப்பு ஆடுகளைக் கண்டறிந்து, அவர்கள் எந்த குற்றவாளிகளுடன் தொடர்புவைத்து இருக்கிறார்கள், எந்தவிதமான சமூக விரோத செயலுக்கு துணைபோகிறார்கள் என்பதை அறிந்து அவர்களை ஒழிக்க வேண்டும்.
போலீசாருக்கு இடையே துறைரீதியான ஒழுக்கமும், ஒற்றுமையும் இருக்க வேண்டும். அலுவகத்தையும், வாழும் வீட்டையும் போலீசார் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும். நிலஆக்கிரமிப்பு மாபியாக்கள், பசு கடத்தல்காரர்கள், சுரங்க மாபியாக்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தயங்கக் கூடாது.
மக்களிடையே போலீசார் குறித்த அச்சத்தை போக்கி எளிதாக அனுகும் முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.