
பன்னீர்செல்வம், எதிர்க்கட்சியான திமுகவோடு கைகோர்த்துள்ளார், ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என்றெல்லாம், சசிகலா அணியினர் அவர் மீது குற்றம் சாட்டி வந்தனர்.
அண்ணாவுக்கு பிறகு, முதல்வரும்-எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசுவது இப்போதுதான் நடக்கிறது என்றெல்லாம் பாராட்டும் அளவுக்கு, ஸ்டாலினும் பன்னீரும் பல விஷயங்களில் சட்டமன்றத்தில் இணைந்து செயல்பட்டனர்.
அதேபோல், இதுவரை பன்னீர்செல்வத்தை பெரிய அளவில் விமர்சித்து பேசாமல் இருந்த ஸ்டாலின், கடந்த இரண்டு நாட்களாக, பன்னீரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
சசிகலாவை விட்டு வெளியே வந்த பன்னீர், அவரை பற்றி பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். ஆனாலும் 90 சதவிகிதத்தை இன்னும் சொல்லவில்லை என்றும் பொடி வைத்து பேசினார்.
அதை வசமாகப் பிடித்துக் கொண்ட ஸ்டாலின், நீங்கள் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி என்றால், அந்த 90 சதவிகிதத்தையும் மறைப்பது ஏன்? என்று கேட்டு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறார்.
திடீரென, பன்னீரை குறிவைத்து ஸ்டாலின் தாக்குவது ஏன்? என்று கேட்டால் எல்லாம் காரணமாகத்தான் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் திமுகவினர்.
தற்போதய நிலவரப்படி, ஆர்.கே.நகரில் திமுகவுக்கும்-பன்னீர் அணிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. தினகரன் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறார்.
வெற்றியை பெறுவதில் திமுகவுக்கும்-பன்னீர் அணிக்கும் நூலிழை வித்தியாசம்தான் உள்ளது என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில், தினகரனை விமர்சிப்பதைவிட, பன்னீரை விமர்சிப்பதன் மூலமே, திமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியும் என்று நினைக்கிறார் ஸ்டாலின்.
அதன் காரணமாகவே, ஜெயலலிதா மரணம் பற்றி பல விஷயத்தை பன்னீர் மறைக்கிறார் என்கிற பாணியில் பேசி, அவருடைய செல்வாக்கை சரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் பன்னீரை, ஸ்டாலின் திடீரென வறுத்தெடுப்பதற்கு அதுவே முக்கிய காரணம் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
ஆனால், பன்னீர்செல்வம் தரப்பிலும் ஸ்டாலினுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.