
எந்த வேலையும் இல்லாத நிலையில், வழக்கமாக செய்து வரும் வேலைக்கு விடுமுறை விடுவது, தனி நபர்கள் முதல் நிறுவனங்கள் வரை கடைபிடிக்கும் ஒரு நடைமுறையாகும்.
அரசியல் தலைவர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பங்கெடுக்க முடியாத நிலையில், பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் அதையே பின்பற்றுகின்றன.
இருந்தாலும், சும்மா இருக்க முடியாமல், தினம் தினம் அறிக்கை விடுவதன் மூலம், தன்னுடைய ஓய்வை சமாளித்து, இருப்பை காட்டிக்கொண்டு வருகிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
மறுபக்கம், வைகோ, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர், ரஜினியின் இலங்கை பயண விவகாரத்தை கையில் எடுத்தனர்.
ரஜினிகாந்தும், தமது இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டு, இதை அரசியலாக்க வேண்டாம் என்று அறிக்கை விட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த வைகோ, தாமே சில வேலைகளை கையில் எடுத்துக் கொண்டு பிஸி ஆகி விட்டார்.
அதன் ஒருபகுதியாக, டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பங்கேற்றார். அவர்களது பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு விளக்கமாக ஒரு கடிதத்தையும் அனுப்பி விட்டார்.
அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார், ராஜிவ் கொலை வழக்கில், நளினி, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதை அறிந்தார்.
உடனே, நேரடியாக மருத்துவமனை சென்று வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியை நலம் விசாரித்து ஒரு புகைப்படமும் எடுத்து அதை ஊடகங்களுக்கு வழங்கினார்.
ராம் ஜெத்மலானிக்கு, இங்குள்ள மருத்துவர்கள்தான் சிகிச்சை அளித்தனர். வெளிநாட்டு மருத்துவர்கள் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை.
அதனால், மருத்துவரின் விசிட்டிங் கார்டை பெறமுடியவில்லையே என்ற வருத்தம் வைகோவுக்கு இருந்தது.
ஆனாலும், ஒரு வழியாக மனதை தெற்றிக் கொண்டு, அடுத்து என்ன செய்யலாம், ஊடகங்களை சந்திப்பதற்கோ, அறிக்கைகள் விடுவதற்கோ ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்து வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மதிமுக போட்டியிடவும் இல்லை, அவருடைய ஆதரவை யாரும் கேட்கவும் இல்லை.
அதனால் எதுவும் செய்ய முடியாமலும், ஒரு இடத்தில் முடங்கி இருக்க முடியாமலும் குட்டி போட்ட பூனையாக அங்கும் இங்கும் தவித்து வருகிறார்.