
கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரனுக்கு செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு.
அதனால், மக்கள் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது? என்று தெரியாமல், அவ்வப்போது திண்டாடி வருகிறார் தினகரன்.
ஆர்.கே.நகரில் ஜெயித்து எப்படியாவது ஆட்சியின் தலைமை பொறுப்பில் அமரவேண்டும் என்பதுதான் தினகரனின் திட்டம்.
ஆனால், தொகுதியில் மக்கள் காட்டும் எதிர்ப்பை பார்த்தால், கெளரவமாக ஒட்டு வாங்க முடியுமா? என்பதே சந்தேகமாக உள்ளது அவருக்கு.
தேர்தல் ஆணையம், சின்னம் குறித்த முடிவை அறிவிக்கும் வரை, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன் என்ற தினகரன், தொப்பி சின்னம் கிடைத்தவுடன் எப்படியாவது ஜெயித்தால் போதும் என்றார்.
ஆனால் தொகுதி முழுக்க மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வரும் அவர், தோற்றால் கூட, கெளரவமான ஒட்டு கிடைக்குமா? என தமக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.
பிரச்சாரத்தில் சசிகலாவின் பெயரோ, புகைப்படமோ வராமல் பார்த்துக் கொண்டார். ஜெயலலிதாவின் பெயரை மட்டுமே சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.
தொகுதி மக்களின் பிரச்சினைகளை, உடனுக்குடன் பைசல் பண்ண அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்து, அதை மும்மரமாக முடுக்கி விட்டுள்ளார்.
உள்ளூர் பிரமுகர்கள் மூலம் வாக்காளர்களின் பெயர், முகவரி, போன் நம்பர் என அனைத்தையும் சேகரித்து, அவர்களை தொகுதிக்கு வெளியே அழைத்து பணம் மற்றும் பொருட்களையும் கூட வழங்கி வருகிறார்.
எனினும் தொகுதியில் எந்தப் பக்கம் சென்றாலும், அவருக்கு எதிர்ப்பே மிஞ்சுகிறது. குறிப்பாக பெண்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அவர் திரும்பி செல்ல வேண்டியுள்ளது.
தொகுதியில் உள்ள, எழில் நகர் பகுதியில், நேற்று முன்தினம் தினகரன் தமது பரிவாரங்களுடன் வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது, தினகரனை முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள், அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் அங்கிருந்து திரும்பி சென்று விட்டார்.
அவருக்கு ஆதரவாக, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் என அனைவருமே தொகுதி மக்களின் எதிர்ப்பை சந்தித்து, அங்கிருந்து திரும்பி செல்ல நேருகிறது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை, மக்கள் திட்டி தீர்க்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதே அதற்கு சான்றாகும்.
எனவே, கோவில் படத்தில் வரும் வடிவேலு ஜெயித்து கப் வாங்க முடியாது என்பதை உணர்ந்து, நாச்சியப்பன் பாத்திர கடையில் கப் வாங்கி வருவது போல, பணத்தையும், பொருளையும் கொடுத்தால்தான் வாக்கு வாங்க முடியம் என்று தினகரன் முடிவு செய்து விட்டார்.
அதனால், தொகுதிக்கு ஒட்டியுள்ள ராயபுரம், திருவொற்றியூர், திரு.வி.க.நகர் போன்ற தொகுதிகளில் உள்ள சில இடங்களில் வாக்காளர்களை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், திமுக மற்றும் ஓ.பி.எஸ் அணிகள், அதையும் கண்டுபிடித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்து வருவதால், அதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.