நரிக்குறவர் வீட்டில் அமர்ந்த ஸ்டாலின்.. வைரலாகும் மாஸ் போட்டோ.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2021, 1:29 PM IST
Highlights

மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் அம்மக்களுக்கு சுமார் 4.5 கோடி செலவில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 57 நரிக்குறவர்கள் 24 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா,  

எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களுக்கு பட்டா கிடைக்காது... ரேஷன் அட்டைக்கு 4 மாதம் நடந்திருக்க வேண்டும்.. ஆனால் முதலமைச்சரின் ஆதரவினால் எல்லாம் இப்போது கிடைத்துவிட்டது.. இப்ப நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம் என முதல்வர் இருந்த மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதி அஸ்வினி.. ஆனால் இதையும் தாண்டி அப்பழங்குடியின மக்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களின் குடிசைகளில் அமர்ந்து, அவர்களுடன் சகஜமாக உரையாடிய சம்பவம் அம்மக்களை மீளமுடியாத நெகிழ்ச்சிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதற்கான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி இப்போது வருகிறது. 

ஆம்.. சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம்  மண்ணில் பூர்வகுடிகளான இருளர் பழங்குடியின மக்கள் எந்த அளவிற்கு  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒதுக்குப்புறத்தில், சாதிய இழிவுடன் வாழ்கின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமம் என்பதையெல்லாம் தாண்டி, சாதி பலமும், அதிகார பலமும் இருப்பவர்களுக்கு மட்டும் தான் அது என்பதையும், வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கு சட்டம், சமத்துவம் இல்லவே இல்லை என்பதையும், கல்வி,  பொருளாதாரம் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சமூகம் எப்படி ஆதிக்க, அதிகார வெறிக்கு இரையாக்கப்படுகிறது என்பதையும் அப்பட்டமாக கண்முன் நிறுத்தியிருக்கிறது ஜெய் பீம். இந்த திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அப்படம் குறித்து தனது உள்ளத்து வலியை பதிவுசெய்கையில், 

ஜெய் பீம் படம் பார்த்தேன், அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதை கனமாக்கிவிட்டது. பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் சிறந்ததொரு கலைப்படைப்பு, அந்த வகையில் இத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும் அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதைவிட துல்லியமாக கலை பூர்வமாக காட்சிப்படுத்த இயலாது என்பதை திரைப்பட குழுவினர் காட்டி விட்டார்கள். இருளர் குறித்த படம் எடுத்ததோடு கடமை முடிந்துவிட்டது என கருதாமல் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை சூர்யா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது உண்மையிலேயே இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சி என வெகுவாக பாராட்டி இருந்தார். இந்நிலையில் அப்படத்தை பாராட்ட மட்டும் செய்யாமல் எங்கெல்லாம் இருளர் இன மக்கள், நரிக்குறவ இன மக்கள் சாதி சான்றுக்காக, இருப்பிடம் வசதிக்காக, உரிமைக்காக ஏங்கித் தவிக்கிறார்களோ அவர்களை இனம் கண்டு, அவர்களின் துயர் துடைக்க களத்தில் இறங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்ற வகையில் அவரின் செயல்கள் இன்று அமைந்துள்ளது. 

தங்கள் பிள்ளைகள், படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வைத்த நரிக்குறவ பெண்ணின் குரல்,  முதல்வரின் நெஞ்சை உலுக்கியதோ என்னவோ, அதன் விளைவாக நரிக்குறவர் பெண் அஸ்வினி வெளியிட்ட வீடியோவையே கோரிக்கையாக ஏற்று நரிக்குறவர் இருளர் இன மக்களின் வாழ்விடம் தேடி புறப்பட்ட முதல்வர் அவர்களை நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு அவர்களுக்கு நலதிட்டம் உதவி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.  மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் அம்மக்களுக்கு சுமார் 4.5 கோடி செலவில் 252 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் 57 நரிக்குறவர்கள் 24 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா,  சாதி சான்றிதழ் வேலைவாய்ப்பு பயிற்சி ஆணை ஆகியவற்றை வழக்கினார். 

இதுமட்டுமின்றி அம்மக்கள் கொடுத்த பாசி மாலை அன்புடன் ஏற்றுக்கொண்ட அவர், அதைக் கழுத்தில் அணிந்து உண்மையான ஜெய்பீமாக காட்சி கொடுத்தார்.  அந்த மக்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டு அவர்களின் விருப்பத்தை மேடையிலேயே நிறைவேற்றியதை காண முடிந்தது. பவர் அவருடன் சகஜமாக கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நரிக்குறவ இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர், பலர் தங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என முதல்வருக்கு அன்பு கோரிக்கை வைத்தனர். அது அனைத்தையும் தட்டாது ஏற்றுக்கொண்ட அவர் நரிக்குறவர்கள், இருளர் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களின் இல்லத்தில் அமர்ந்து அவர்களின் விருப்பத்தை  நிறைவேற்றினார்.

8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல்வர் தங்கள் இல்லம் தேடி வந்து அம்மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்தவகையில் முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் பெண்களின்  பிரதிநிதி அஸ்வினியின் வீட்டுக்கு சென்று  அவர் வீட்டு இருக்கையில் அமர்ந்து அவர்களுடன் உரையாடினார். இன்னும் பல நரிக்குறவர் இல்லங்களுக்கும் இவர் சென்று நலம் வசாரித்தார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல்வர் என்பது பதவி அல்ல கடமை என்பதை தன் செயலால் உணர்த்தியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு ராயல் சல்யூட். 
 

click me!