களத்தில் இறங்கிய ரியல் ஜெய் பீம் ஸ்டாலின்.. பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ், பட்டா வழங்கி நெகிழ்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2021, 11:45 AM IST
Highlights

மேலும் 4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அங்க உதவிகளை பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

நரிக்குறவர் இன மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சாதி சான்றிதழ் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இருளர் இன மக்களுக்கு வங்கி கடன் உதவியும் அப்போது அவர் வழங்கினார். முதல்வரின் இந்த உதவிக்கு அம்மக்கள்  நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் நடந்த  நிகழ்ச்சியில் இந்த நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு அதிரடி மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்கள் வெகுவாக வரவேற்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கும், இருளர் இன சமூக மக்களுக்கும் தீபாவளித் திருநாளான இன்று அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். 

சமீபத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதில் நரிக்குறவர் இன சமூகத்தைச் சேர்ந்த பெண் அந்த அன்னதானத்தில் சாப்பிட சென்றபோது அங்கிருந்த சிலர் அவரை தடுத்ததுடன் பந்தியில் அமரக்கூடாது அனைவரும் சாப்பிட்ட பிறகு மீதி இருந்தால் தருகிறோம் எனக் கூறி அவமானப்படுத்தினர், அதனையடுத்து அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியாக கொடுத்திருந்தார். அதில், எங்கள் சமூகம் படித்திருந்தால் நாங்களும் நல்ல உடை அணிந்திருப்போம் இதுபோல பொது இடத்தில் அவமானப்பட வேண்டி இருக்காது என அவர் கூறியிருந்தார். இந்த தகவல் முதல்வரின் கவனத்திற்கு சென்றது, உடனே மறுநாள் அக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பாதிக்கப்பட்ட நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அப்போது அந்தப் பெண் அமைச்சருக்கு அச்சமூக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்திருந்தனர். அதேபோல மற்றொரு காணொளியை அந்தப்பெண் வெளியிட்டிருந்தார் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதை பரிசீலித்த தமிழக முதலமைச்சர் மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்திற்கு தேவையான வசதிகளை செய்து தர உத்தரவிட்டார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகையான இன்று  மாமல்லபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு தமிழக முதலமைச்சர் நேரில் சென்று 57 நரிக்குறவர்கள் 24 இருளர் குடும்பங்களுக்கு இன்று வீட்டுமனைப்பட்டா வழங்கினார். மொத்தத்தில் 81பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, சாதி சான்று, வேலைவாய்ப்பு பயிற்சி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார். மேலும் 4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

அப்போது அங்க உதவிகளை பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அப்போது நரிக்குறவர் சமூகத்தைச் சார்ந்த அஸ்வினி முதலமைச்சருக்கு பாசி மாலை அணிவித்து மகிழ்ந்தார். பின்னர் மேடையில் பேசிய அந்த பெண், எங்களுக்கு யாருமே என்று இல்லை என்று நாங்கள் எண்ணியிருந்தோம், ஆனால் நாங்கள் இருக்கிறோம் என முதலமைச்சர் நேரில் வந்து வீட்டு மனை பட்டா,  எங்கள் பிள்ளைகள் படிக்க உதவிகளை செய்திருக்கிறார். இந்த நன்றியை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்,  சாதி சான்று பெறுவதற்கு நாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம், ஆனால் முதலமைச்சர் அதை இன்று எங்கள் கையில் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் கண்ணீர் மல்க கூறினார். பழங்குடியின மக்களுக்கு நேரும் அநீதியை கண்முன் நிறுத்தியுள்ள ஜெய்பீம் படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் அப்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்நிலையில், ரியல் ஜெய் பீமாக களத்தில் இறங்கி பழங்குடி மக்களுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!