
திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சி நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதுகுறித்த விழா மலரை கருணாநிதியிடம் காட்டி ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது குறித்த வீடியோ படம் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறும் தமிழக அரசியலின் 75 ஆண்டுகால வரலாறும் கிட்டத்தட்ட ஒன்று என்று தான் கூற வேண்டும்.
அந்த அரசியல் நாயகனின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் வைர விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார், புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி வைர விழா நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
வைரவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்த விழா மலரை கருணாநிதியிடம் காட்டி ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது குறித்த வீடியோ படம் வெளியாகி உள்ளது.
வண்ணத்தில் நவீன முறையில் தயாரிக்கப்பட்ட நூறு பக்கங்களுக்கும் மேல் உள்ள அந்த மலரை வரலாற்று பெட்டகம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த வீடியோவில் ட்ரக்யோஸ்டமி பேண்டேஜ் கழுத்தில் அணிந்து ஸ்டாலினுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார்.