
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடந்தது என்ன என்ற தலைப்பில் பேசிய வைகோ மீது, அப்போதைய தமிழக அரசு தேசத்துரோக வழக்கு பதிவுசெய்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், கடந்த 25-ம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த வைகோ இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது செஷன்ஸ் ஆஜரானார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூன் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமிழக அரசு முக்கிய பிரச்சனைகளில் கருத்து கூற மறுப்பதாகவும், மாட்டிறைச்சி தொடர்பாக கேரளா, மேற்குவங்க முதலமைச்சர்கள் கருத்து கூறும் போது தமிழக அரசு மௌனமாக இருப்பது துரதிஷ்டவசமானது எனவும் தெரிவித்தார்.