
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்சி, ஆட்சி என அனைத்திலும் இரண்டு சாதிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. ஆனாலும், மற்ற சாதிகளையும் அவர் முற்றாக புறக்கணிக்கவில்லை.
ஆனால், அவர் மறைவுக்கு பின்னர், எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றதும், ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கம், கட்சி, ஆட்சி, அரசின் அதிகார பதவிகள் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் கூட இரு சாதிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பெரும்பான்மை சமூகமான வன்னியர்களுக்கு ஒரு பதவி கூட வழங்கப்படவில்லை என்ற சர்ச்சையும் வெடித்தது.
இது சசிகலா மற்றும் திவாகரனின் கவனத்திற்கும் சென்றுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, அவர் எதை செய்தாலும் யாரும் கேட்க முடியாது. எனினும் அவர் அனைத்து சாதிகளையும் சமன் செய்யும் வகையில் நடந்து கொண்டார்.
இதையடுத்து, சிறையில் தம்மை சந்தித்த விவேக் மூலமாக, கட்சி, ஆட்சி மற்றும் அரசு பதவிகளில் அனைத்து சாதிகளுக்கும் போதிய முக்கியத்துவம் கொடுக்குமாறு எடப்பாடிக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார் சசிகலா.
முதல்வர் எடப்பாடி அமைச்சராக இருந்த காலத்திலேயே ஜாதி பார்த்துதான், டெண்டர், கட்சி பதவி என அனைத்தையும் வழங்குவார். எதிர் கட்சியாக இருந்தாலும், தம் சாதிக்காரர்களுக்கு மட்டுமே டெண்டர்களை வழங்கியவர் என்ற குற்றச்சாட்டு உண்டு.