
மேயர் , துணை மேயர் தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் திமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. மற்ற 20 இடங்களிலும் திமுக போட்டியிடுகிறது. மறைமுக தேர்தலாக மேயர் தேர்தல் நடைபெற்றாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சியிலும் பெரும்பான்மையான இடங்களை திமுகவே கைப்பற்றியுள்ளது. எனவே திமுக அறிவித்துள்ள மேயர் வேட்பாளர்களே மேயர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளனர். அதிலிலும் 21 மாநகராட்சியில் 11முக்கியமான மாநகராட்சிகளில் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்
சென்னை மாநகர தந்தையாக 28 வயதான முதுகலை பட்டதாரியான பிரியா ராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். எப்பவும் தென் சென்னையை சேர்ந்தவர்களே பெரும்பாலும் மேயராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வட சென்னை பகுதியை சேர்ந்த ஒருவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளது வட சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சென்னையில் 3 வது பெண் மேயராகவும் அதிலும் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், முதல் முறையாக சென்னை மேயராக அமர போவது சென்னை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.காஞ்சிபுரம் மாநகர மேயராக திருமதி மகாலட்சுமி யுவராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். முதுகலைப்பட்டம் பயின்ற மகாலட்சுமி இன்போசிஸ் மென் பொருள் நிறுவனத்தில் மூத்த மென் பொறியாளராக பணியாற்றியவர், அரசியல் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தனது பணியில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு தற்போது மேயர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை தினேஷ் மேயராக அறிவிக்கப்ட்டுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் முதுகலை பட்டம் பயின்றவர், 1998 ஆம் ஆண்டு இந்திய ஜப்பான் கூட்டு இளம் தலைவர்கள் கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து இளம் மாணவர் தலைவராக பங்கேற்றவர் தற்போது திருப்பூர் நகர தந்தையாக தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சியில் அலங்கரிக்கப்போவது 9வது வகுப்பு மட்டுமே படித்த திருமதி நாகரத்தினத்திற்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் சுப்பிரமணி மாநகர செயலாளராக உள்ளார். ஈரோட்டில் திமுக முக்கிய நிர்வாகியாகவும் உள்ளார்.
கோவை மேயராக கல்பனா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார் இவர், மிக எளிமையான குடும்பத்தை சார்ந்தவர், மாநகராட்சி தேர்தலில் வெற்றபெற்ற பிறகும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்ற போது ஆடம்பர கார்களில் செல்லாமல் தன்னால் முடிந்த அளவான அரசு பேருந்திலேயே பயணம் செய்து முதலமைச்சரை சந்தித்து வந்துள்ளார். சாதாரன மக்களோடு மக்களாக பழகி வரும் கல்பனாவிற்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. கோவை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.திண்டுக்கல் மாநாகராட்சி மேயராக திருமதி.இளமதி அறிவிக்கப்பட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளமதி, பள்ளி ஆசிரியராக இருந்து மாணவர்களை நல்வழிபடுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் தற்போது திண்டுக்கல் மாநகாரட்சி மேயராக பதவி வழங்கப்பட்டதை திண்டுக்கல் மக்கள் வரவேற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சண்.ராமநாதன் முதுகலை பட்டம் படித்துள்ளார். தமிழ்நாடு கேரம் அசோசியேசன் துணை தலைவராக இருக்கும் ராமநாதன் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் காரணமாக மாநில அளவிலான கேரம் போட்டியை தஞ்சாவூரில் மூன்று முறை நடத்தி விளையாட்டு வீரர்கள் மத்தியலும் பொதுமக்கள் மத்தியலும் நன்மதிப்பை பெற்றுள்ளார். இது போல பல்வேறு மேயர் வேட்பாளர்கள் மக்கள் பிரச்சனைகளை கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திமுக அறிவித்துள்ளது.