
அதிமுக ஆட்சியை, அதில் உள்ளவர்களே தனித்தனி அணியாக செயல்பட்டு கவிழ்த்து கொள்வார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவில் தினகரன் அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, தீபா அணி என பல அணிகளாக பிரிந்து செயல்படுகிறார்கள். ஆனால், மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ததாக தெரியவில்லை. இதனால், அவர்களே அதிமுக ஆட்சியை கவிழ்த்து கொள்வார்கள்.
தமிழகத்துக்கு தேவையான நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதை முறையாக பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. மக்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்.
மனித நேயத்தை கற்று கொடுத்தவர் மகாத்மா காந்தி. ஆனால், அரசியல் கட்சியில் உள்ள சில தலைவர்கள், தங்களது பதவியை விட மிருக பலம் கொண்டவர்களாக பேசி வருகிறார்கள். மகாத்மா காந்தியை பற்றி பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா கூறியது வேதனையான விஷயம்.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் அமைச்சர் ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார். அதிமுகவில் எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமில்லாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட சுகாதார துறை அமைச்சர் பேசவில்லை. வருவாய் துறை அமைச்சர் பேசுவது வேடிக்கையானது. இதில், அவர்களுக்குள் இருக்கும் போட்டியே, எந்த பணியையும் செய்யவிடாமல் தடுக்கிறது.
பாலில் கலப்படம் இருப்பதாக கூறினார்கள். ஆனால், அதில் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள். என்ன முன்னேற்றம் அடைந்துள்ளது. யாருக்காவது தண்டனை கிடைத்தா என்றால், இதுவரை எதுவும் தெரியவில்லை.
இந்நிலையில், உணவு பொருட்களான அரிசி, சர்க்கரை, முட்டையில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனை, ஆட்சியில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு, தீவிரமாக செயல்பட்டு தடுக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறினார்.