
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல் அமைச்சர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றிருந்தார். கோலாலம்பூர் விமான நிலையம் சென்ற அவரை அந்நாட்டுப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மலேசியாவுக்கு ஆபத்தானவர்களின் பட்டியலில் வைகோவின் பெயர் இடம்பெற்றிருப்பதால் நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கக முடியாது என்று கூறி தனி அறையில் வைகோவை அடைத்து வைத்த போலீசார் மறு விமானத்திலேயே அவரை இந்தியா அனுப்பி வைத்தனர்.
மலேசிய தூதரகம் விசா அளித்தும், இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு ஏதும் தெரிவிக்காத நிலையில் வைகோ தடுத்து நிறுத்தப்பட்டது சர்ச்சையைாக வெடித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, மலேசியாவுக்குள் செல்ல தமக்கு தடை விதிக்கப்பட்டிப்பதன் பின்னணியில் இலங்கை அரசு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மலேசியாவில் நுழைய தடை விதித்த விவகாரத்தில் எனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். இந்த விவகாரத்தில் பலரும் எனக்கு ஆதரவாக பேசிய இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் வைகோ கூறினார்.