வேலூர் தேர்தல் வெற்றி! கொண்டாட்டம் இல்லாமல் போன ஸ்டாலின் வீடு!

By Selva KathirFirst Published Aug 11, 2019, 11:09 AM IST
Highlights

வேலூர் தொகுதியில் திமுக வென்ற நிலையிலும் அவர்கள் தரப்பில் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டவில்லை.

வேலூர் தொகுதியில் திமுக வென்ற நிலையிலும் அவர்கள் தரப்பில் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டவில்லை.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று முடிந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு திமுக மட்டும் அல்ல அதிமுகவிற்கும் கூட மகிழ்ச்சியை தரவில்லை. மிக சொற்பமான அளவில் வாக்குகளை கூட பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த முடிவானது ஒரு டை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது அதிமுக – திமுக என யாருக்கும் இது கொண்டாடக்கூடிய முடிவு அல்ல.

ஏனென்றால் ஜெயலலிதா மற்றும் கலைஞர் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. இந்த வெற்றிடத்தை பிடிக்கத்தான் ஸ்டாலின் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்த நிலையில் ஸ்டாலின் தலைமை மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்ற நிலையில் கலைஞர் – ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் ஸ்டாலின் மூலமாக நிரப்பப்பட்டுவிட்டதாக திருமாவளவன் பேசினார்.

இந்த நிலையில்  தான் வேலூர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த முடிவுகள் மக்கள் திமுகவை முழுமையாக ஏற்று வெற்றியை தந்தது போல் தெரியவில்லை. மொத்தம் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் திமுக வேட்பாளரும் மூன்றில் அதிமுக வேட்பாளரும் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திமுக வேட்பாளருக்கு கிடைத்த கூடுதல் வாக்குகள் தான் திருப்புமுனையை தந்தது.

அந்த வகையில் அந்த வாக்குகளும் கூட அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக விழுந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஸ்டாலின் தலைமையைஅங்கிகரித்து மக்கள் ஒரு மகத்தான வெற்றியை வேலூர் தரவில்லை. எடப்பாடியை பார்ப்பது போலவே ஸ்டாலினையும் மக்கள் பார்ப்பது இந்த வேலூர் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இதனைத்தான் திமுக முகாமும் உணர்ந்துள்ளது. எனவே தான் இடைத்தேர்தல் வெற்றி களைகட்டவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீடு விழாக்கோலம் பூண்டது. வீட்டிற்கு வந்த அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை என்றாலும் அதில் பாதி கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே மக்களை கவர்ந்த நாயகனாக ஸ்டாலின் உருவாகும் வகையில் வியூகம் வகுக்க வேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

click me!