
திமுக சார்பில், ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.
மேலும் மரக்கன்றுகளை சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பசுமை பாதுகாவலர் என்ற விருது வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவை தொடங்கிவைத்த பிறகு, மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது திமுக ஆட்சி நடைபெறுவதாக மக்கள் எண்ணுகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியிலேயே குளம் தூர்வாரும் பணியை திமுக செய்து வருகிறது. மக்களுக்கான எனது பணியை நான் முறையாக தொடர்ந்து செய்து வருகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
சைதை தொகுதியில் மட்டும் அல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்படும். உலகம் வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, சென்னையில் பசுமையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்படும்.
இத்திட்டத்தின் கீழ் அதிக உறுதித்தன்மை மிக்க வேப்பமரம், புங்கை, பூவரசு, அத்தி, நாவல் போன்ற பல்வேறு வகையான மர வகைகள் நடப்படும்.
அவற்றை ஒரு வருடம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு ‘பசுமை பாதுகாவலர்’ விருதுகள் வழங்கப்படும். ஒரு நாடு 33 சதவீத வனப்பரப்பு கொண்டிருக்க வேண்டிய நிலையில் தமிழகத்தில் 17.5 சதவீதமே, வனப்பரப்பு உள்ளது.
சென்னையில் 6.5 சதவீதமே இருந்த பசுமைப் பகுதி சமீபத்திய ‘வார்தா’ புயலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்த நிலையில் 4.5 சதவீதமாக குறைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.