ஜெயலலிதா அடைய ஆசைப்பட்டதை, நெருங்கி நிற்கும் ஸ்டாலின்: அதிரும் கழகங்கள்!

By thenmozhi gFirst Published Dec 17, 2018, 6:48 PM IST
Highlights

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மிக மிக மோசமான பெயரை சம்பாதித்து வைத்திருந்தது காங்கிரஸின் கூட்டணி அரசு. அதை மிக சரியாக பயன்படுத்தி மேலேறி வந்தார் குஜராத் முதல்வராக இருந்த மோடி. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மிக மிக மோசமான பெயரை சம்பாதித்து வைத்திருந்தது காங்கிரஸின் கூட்டணி அரசு. அதை மிக சரியாக பயன்படுத்தி மேலேறி வந்தார் குஜராத் முதல்வராக இருந்த மோடி. ஆனால் அதேவேளையில் பிராந்திய முதல்வர்கள் வேறு சிலருக்கும் ‘பிரதமர்’ பதவி மீது கண் இருந்தது, அல்லது ‘உங்களுக்கு அந்த தகுதி இல்லையா என்ன?!’ என்று சில கிங் மேக்கர்கள் சிலரை உசுப்பிவிட்டனர். 

அப்படி உசுப்பப்ப்பட்டவர்களில் முக்கியமான இருவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும். மம்தா கூட அந்த ஆசையில் ஃபர்ஸ்ட் கியரைப் போட்டாலும், அடுத்ததடுத்த நிலைகளில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். ஆனால் ஜெயலலிதாவோ அந்த ஆசையிலிருந்து விடுபடவுமில்லை, அவரை விடுபட வைக்கவும் சிலர் தயாரில்லை. 

’பிரதமர் ஆகுறீங்க! அல்லது துணை பிரதமராவது ஆகுறீங்க! என்று அந்த வைபரேஷனை மெயிண்டெய்ன் செய்து கொண்டே வந்தனர்.  அந்த கெத்தில்தான் கூட்டணி இன்றி தனித்து நின்றார் ஜெயலலிதா. அதோடு நில்லாமல் அந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் பிரசார வடிவங்கள் அனைத்தும் ஜெயலலிதாவை சர்வ இந்தியாவுக்கும் தலைவியாக்கும் முயற்சியில்தான்  அமைக்கப்பட்டன. 

அமைதி! வளம்! வளர்ச்சி - இந்தியா முழுமைக்கும்’ என்று ஜெயலலிதாவின் பிரசார மேடைகளில் ஒளிர்ந்த வாக்கியம் ஜெ.,வின் பிரதமராசையின் உச்சத்தைக் காட்டின. தேர்தல் முடிந்து, ரிசல்ட் வந்தபோது கிட்டத்தட்ட தான் பிரதமராகவோ, அல்லது துணை பிரதமராகவோ ஆகிவிட்டது போலவே உணர்ந்தார் ஜெ., காரணம், அப்படியொரு இமாலய வெற்றி. ஆனால் தமிழகத்தில் மிக மோசமாக தோற்றிருந்தாலும் கூட வட இந்திய மாநிலங்களில் பி.ஜே.பி. பெற்றிருந்த முரட்டு மெஜாரிட்டியானது ஜெயலலிதாவின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்டது. 

ஆனாலும் மிக அதிகப்படியான எம்.பி.க்களை வைத்திருக்கும் மாநில கட்சி என்ற முறையில் பி.ஜே.பி., காங்கிரஸுக்கு அடுத்து விஸ்வரூபமாய் வளர்ந்து நின்றது அ.தி.மு.க. அதன் பொதுச்செயலாளர் எனும்  முறையில் ஜெயலலிதாவுக்கு நாடு தழுவிய பெயர் உருவானது. இதை வைத்துக் கொண்டு பெரிதாய் அரசியல் செய்யும் ஆசையில் காலெடுத்து வைக்க துவங்கினார் ஜெ., ஆனால் காலம் அவரது கனவை பறிக்க, காலனோ அவரையே பறித்துக் கொண்டான். 

மிழகத்திலிருந்து முரசொலி மாறன் உள்ளிட்ட வெகு சிலர் டெல்லியில் செல்வாக்கு பெற்றிருக்கின்றனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த பெரும் கட்சி ஒன்றின் தலைவர், வட இந்தியாவில் பெரியளவில் பிரதிநிதித்துவம் பெற்றதாக பெரிய வரலாறு இல்லை. ஜெயலலிதா அதை அடைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை தகர்ந்தது. 

காலங்கள் ஓடிய நிலையில், இந்நிலையில் கடந்த வாரத்திலிருந்து திடீரென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைக்க துவங்கியுள்ளது. ’மோடிக்கு இணையான அரசியல் திறன் வாய்ந்தவர் ஸ்டாலின்! அவருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும்.’ என்று சந்திரபாபு நாயுடு எந்த நேரத்தில் சொன்னாரோ அது அப்படியே பலிக்கிறது! என கூத்தாடுகிறார்கள் தி.மு.க.வினர். 

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக டெல்லி சென்ற ஸ்டாலினை சோனியாவும், ராகுலும் பெரும் மரியாதை கொடுத்து வரவேற்றனர். அதற்கடுத்த நாள் நடந்த பி.ஜே.பி.க்கு எதிரான கட்சிகளின் கூட்டணி ஆலோசனை நிகழ்வில் மன்மோகனுக்கு அடுத்த இடம் ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டு கவுரவம் தரப்பட்டது ராகுலால். இதன் மூலம் தேசிய அளவில் கவனத்துக்கு உள்ளானார் ஸ்டாலின். 

சோனியாவே வருவாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட கருணாநிதி சிலை திறப்புவிழாவுக்கு சோனியா, ராகுல் இருவருமே வந்து நின்று தி.மு.க.வை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தனர். அதிலும் ராகுலின் பேச்சும், செயல்களும் ஸ்டாலின் தரப்பை குஷியின் உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது. 

இதெல்லாம் நிகழ்ந்து ஒரு நாள் கூட முழுதாய் முடியவில்லை. அதற்குள், சமீபத்தில் தேர்தலில் வென்ற மாநிலங்களில் காங்கிரஸ் புள்ளிகள் முதல்வராய் பதவியேற்கும் மாநிலங்களில் அவ்விழாவுக்கு அழைக்கப்பட்டு, கலந்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மன்மோகன் சிங், ராகுல் உடன் பேருந்தில் உட்கார்ந்தபடி ஸ்டாலின் செல்பி எடுத்திருக்கும் புகைப்படங்கள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கின்றன. 

தொடர்ந்து வட இந்திய முக்கிய அரசியல் தலைவர்களுடன் ஸ்டாலின் பயணிக்கும் விஷயத்தின் மூலம் தி.மு.க.வும் பெரும் எழுச்சியை காணுகிறது! என்று மகிழ்கிறார்கள் அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள். தி.மு.க.வுக்கு ஆச்சரியமும், அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியும் ஒரு சேர கிடைத்துள்ளது. 

ஆக ஜெயலலிதா அடைய ஆசைப்பட்ட தேசிய அளவிலான முக்கியத்துவத்தை ஸ்டாலின் நெருங்கி நிற்கிறார்! என்பதே யதார்த்தம்.

click me!