தி.மு.க போடும் மாஸ்டர் பிளான்! கூட்டணி கட்சிகளை கண்ணீர் விட்டு அழவைத்த ஸ்டாலின் கணக்கு...

By sathish kFirst Published Dec 2, 2018, 10:14 AM IST
Highlights

தி.மு.க கூட்டணியில் இடம்பெறும் தேசிய கட்சிகள் தவிர மற்றவற்றை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு அந்த கட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதிக எம்.பிக்களுடன் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பது தி.மு.கவின் ஆசையாக உள்ளது. இதற்காக தி.மு.க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் முதல் வியூகம் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக எம்.பிக்களை பெறுவது என்பது தான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒன்பது தொகுதிகள், இடதுசாரிகளுக்கு 2 தொகுதிகள் போக எஞ்சியுள்ள 29 தொகுதிகளை தி.மு.க குறி வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் போட்டியிடும் பட்சத்தில் தற்போதைய சூழலில் 30 தொகுதிகளையுமே அள்ளிவிடலாம் என்பது தான் தி.மு.கவின் கணக்காக உள்ளது. ஆனால் கூட்டணியில் இடம்பெறும் ஆர்வத்தில் உள்ள ம.தி.மு.க, வி.சி.க, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  ஆகிய கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அந்த வகையில் அந்த கட்சிகளுக்கு சுமார் 5 தொகுதிகளை ஒதுக்கினால் 25 தொகுதிகள் தி.மு.கவிற்கு பாக்கி இருக்கும்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தை ஜெயலலிதா களம் இறக்கினார். கூட்டணி கட்சிகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று டீலை முடித்தார். இதே பாணியில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற உள்ள ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தி.மு.க கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தான் ம.தி.மு.க, வி.சி.க கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் உள்ளதாக சொல்லப்படுகிறது. ம.தி.மு.கவும் சரி வி.சி.கவும் சரி தங்கள் கட்சிக்கான தனி சின்னத்தில் போட்டியிடுவதையே கவுரவமாக நினைக்கிறார்கள். மேலும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டால் நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். எனவே தான் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!