
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின், தமிழுக்கும், கவிக்கும் வெகுமானமாக இருந்தவர் அப்துல் ரகுமான் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கவிக்கோ என போற்றப்படும் அப்துல் ரகுமான் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார். அசரது உடல் சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் அப்துல் ரகுமான் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த அப்துல் ரகுமான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மீதும், கலைஞர் கருணாநிதி மீதும் மிகுந்த பற்றும், பாசமும் கொண்டிருந்தவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
தமிழுக்கும், கவிக்கும் வெகுமானமாக திகழ்ந்த அப்துல் ரகுமானின் மறைவு, தமிழ் உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக தெரிவித்தார்.
கருணாநிதியால் தமிழின் கருவூலம் என்று புகழப்பட்ட அப்துல் ரகுமானின் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.