
கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டு விட்டதாக சொல்வதெல்லாம் வெறும் நாடகம் என்று, பன்னீர் ஏற்கனவே கூறியது முழுக்க முழுக்க உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்” இன்னும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அந்த நாளேட்டில், மூன்றாண்டு மோடி ஆட்சியை பற்றி சித்திர குப்தன் என்ற பெயரில் ஒரு நையாண்டி கவிதை எழுதப்பட்டுள்ளது.
“அதில் மூச்சு முட்ட பேச்சு… மூன்றாண்டு போச்சு” “இது நாட்டை காக்கும் அரசா இல்லை மாட்டை காக்கும் அரசா” என்றெல்லாம் மோடியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு பின்னணியில் இன்னொரு முக்கிய காரணமாக கூறப்படுவது, வரும் ஜூலை மாதத்தில் நடைபெற போகும் குடியரசு தலைவர் தேர்தல்.
அதற்காக, எடப்பாடியையும், பன்னீரையும் தமது கட்டுப்பாட்டில் வைத்து கொண்டால், அதிமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு கிடைக்கும் என்று கணக்கு போட்டு வைத்திருந்தார் மோடி.
ஆனால், அதிமுகவின் பெரும்பாலான எம்.எல்.ஏ க்களும், எம்.பி க்களும், இன்னும் சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதுதான், சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த சசிகலா தரப்பு, தங்கள் மீதான வழக்குகளை நீர்த்து போக வைக்க வில்லை என்றால், குடியரசு தேர்தலில், பாஜக வுக்கு ஆதரவு இல்லை என்று உறுதியாக கூறி இருக்கிறது.
அதன் வெளிப்பாடே, மாட்டிறைச்சி தடைக்கு எதிராக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையின் உதிர்த்த குரல் என்று தினகரன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, தினகரனுக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது.
மேலும், நாளை மறுதினம், உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வரும், சசிகலாவின் சீராய்வு மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதிமுகவின் முடிவில் மாற்றம் இருக்கும்.
இல்லையெனில், குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுக எம்.எல்.ஏ, எம்.பி க்கள், பாஜக வுக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை நாள், இத்தனை தாக்குதல்களை தொடுத்த மோடிக்கு, குடியரசு தலைவர் தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும், அல்லது அதை சாதகமாக பயன்படுத்தி, காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும் என்ற சசிகலாவின் கணக்கு ஒர்க்-அவுட் ஆகி உள்ளது என்றே சொல்லப்படுகிறது.