8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுங்கள்… பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 18, 2021, 4:44 PM IST
Highlights

#CMStalin | தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள 8 மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் 8 மாநில நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு,  ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் கொள்கை அளவில்  ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை அடுத்து அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், முக்கியமான சுற்றுலா மையங்கள் மற்றும் புனித தலங்களை இணைக்கும், அந்த சாலைகளில் உடனடியாக மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் வகையில், அவற்றை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்புகளை முறையாக பராமரித்து உரிய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழகத்தில் எட்டு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதற்காக விரிவான திட்ட அறிக்கைகள் கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மாநில தேசிய நெடுஞ்சாலைப் பிரிவால் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த பரிந்துரைகள் 06.12.2018 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பான முறையான அறிவிப்பு மத்திய அரசு தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், திருவண்ணாமலை – கள்ளக்குறிச்சி சாலை, வள்ளியூர் – திருச்செந்தூர் சாலை, கொல்லேகால் – மாதேஸ்வரன் மலை – பாலாறு சாலை, பழனி – தாராபுரம் சாலை, ஆற்காடு – திண்டிவனம் சாலை, மேட்டுப்பாளையம் – பவானி சாலை, அவினாசி – மேட்டுப்பாளையம் சாலை, பவானி – கரூர் சாலை ஆகிய எட்டு நெடுஞ்சாலைகளும் மிகவும் முக்கியமானவை என்றும் அதில் திருவண்ணாமலை, திருச்செந்தூர், பழனி ஆகியவை கோயில் நகரங்களாக திகழ்கின்றன என்றும் சுற்றுலா ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலை பயன்பாட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடியாக சில மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் புதிய தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டிற்கு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவற்றிற்கான முதன்மையான ஒப்புதல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்று கூறிய அவர், உடனடியான முறையான அறிவிப்பை வெளியிடலாம் என்றும் எனவே மேற்குறிப்பிட்ட எட்டு சாலைகளில் உடனடியாக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில், இச்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றும் அறிவிப்புகளை வெளியிட பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் தனது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!