அண்ணன் அழகிரியின் இடத்தை நிரப்ப முடியாமல் திணறும் ஸ்டாலின்.. இந்த அமைச்சரை வலிந்து முன்னிருத்தும் முதல்வர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2022, 2:49 PM IST
Highlights

தென் மண்டலத்தில் மதுரைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என முடிவு செய்தபோது தான் மதுரை மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவு செய்தோம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தென் மண்டலத்தில் மதுரைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என முடிவு செய்தபோது தான் மதுரை மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவு செய்தோம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அமைச்சர் மூர்த்தி என்றால் எனக்கு ஒரு பயம, அவர் மிகுந்த கோபக்காரர் என்றும்  ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் மு.கருணாநிதி திமுக தலைவராக இருந்தபோது, தமிழகத்தை இரண்டாக பிரித்து தென் மண்டலத்தை அழகிரிக்கும், பிற பகுதிகளை மு.க ஸ்டாலினுக்கு வழங்கினார்.

அழகிரி தென் மண்டல பொறுப்பாளராக இருந்தவரை திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றியாகவே இருந்துவந்தது. எதையும் நேர்த்தியாக செய்து முடிக்க கூடியவர் அழகிரி, முடியாது என்று எதுவுமே இல்லை, இதுதான் அழகிரியின் பாலிசி. அதனால் தான் அவர் இன்றும் அஞ்சாநெஞ்சன் என்று அழைக்கப்படுகிறார்.

அன்று நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக வின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் அழகிரி, இந்த வெற்றிக்கு பரிசாகத்தான் தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அழகிரிக்கு வழங்கப்பட்டது. மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில்தான் அழகிரியை அஞ்சா நெஞ்சன் என்று அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அழைத்தார். தென் மாவட்டங்களில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு அழகிரியின் கண்ணசைவு தேவை என்ற நிலைமையே இருந்தது.

அப்போதே திமுகவை கைப்பற்றும் முடிவில் இருந்த ஸ்டாலினுக்கு இது மிகப்பெரிய சவாலாக இருந்தது. தென் மாவட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே ஸ்டாலினின் கோஷ்டியில் இருக்க, பெரும்பான்மையான நிர்வாகிகள் அழகிரியின் பின்னால் இருந்தனர். ஸ்டாலினுக்கு இணையாக செல்வாக்கு நிறைந்தவராக அழகிரி வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தார், ஒரு காலத்தில் தென் மண்டலத்தில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த அழகிரி திடீரென கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.அதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் மிகச் சாதாரணமானவைதான்.

தென்மாவட்டத்தில் அழகிரி இருந்தால் திமுகவின் வெற்றிக்கு அது பாதகமாக அமைந்துவிடும் என்ற பிரச்சாரம் திமுகவிலேயே அப்போது செய்யப்பட்டது.  பின்னர் மதுரையில் ஸ்டாலின்- அழகிரி ஆதரவாளர்கள் இடையே போட்டி, மோதல் ஏற்பட்டது. பின்னர் தென் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டு அழகிரி ஆதரவாளர்கள் களை எடுக்கப்பட்டனர்.

அதை அழகிரி தட்டிக்கேட்க அவரையும் கட்சியில் இருந்து தூக்கி விட்டனர். இப்படியாக அழகிரியின் அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில்தான் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுக ஸ்டாலின் வசம் வந்தது. இன்னும்கூட தென்மாவட்டத்தில் அழகிரியின் இடத்தை நிரப்பும் அளவிற்கு திமுகவில் நிர்வாகிகள் இல்லை என்றே கூறலாம்.

அதன் வெளிப்பாடாகத்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது, இந்நேரத்திற்கு அழகிரி இருந்திருந்தால் இது போன்ற சில்மிஷங்கள் எல்லாம் அங்கு நடக்க வாய்ப்பே இருந்திருக்காது என்பதுதான் திமுகவினரும் கருத்தாக உள்ளது.

 இது ஒருபுறமிருக்க இன்று மதுரையில் அமைச்சர் மூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மதுரைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மதுரை மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தகவல் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசிய விவரம் பின்வருமாறு:-  அமைச்சர் மதுரை மூர்த்தி தன் இல்லத் திருமணத்தை ஒரு மண்டல மாநாடு போல நடத்தி இருக்கிறார், அழைப்பிதழில் இதை மாநாடு என குறிப்பிட்டிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். மாநாடாக இருந்தாலும் பொதுக் கூட்டமாக இருந்தாலும் எதையும் பிரம்மாண்டமாக செய்யக்கூடியவர் மூர்த்தி, எந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினாலும் அதில் முத்திரை பதிக்க கூடியவர் மூர்த்தி,  ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்று சொல்வார்கள் ஆனால் ஒரு கல்லில் இரண்டு அல்ல பல மாங்காய்களை அடிக்கக் கூடியவர் மூர்த்தி.

நாம் வெற்றிபெற்ற பின்னர் அமைச்சர்களாக யார் யாரைப் போடலாம் என நாங்கள் சிந்தித்தோம், அப்போது சில முக்கிய நிர்வாகிகளுடன் நாம் கலந்து பேசிக்கொண்டிருந்தபோது தென்பகுதியில் மதுரைக்கு ஒரு முக்கியத்துவம் தரவேண்டும் என முடிவு செய்தோம், மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று முடிவு செய்தோம், ஆனால் எனக்கு அதில் ரெம்ப பயமா இருந்தது, ஏனென்றால் அவர் ரொம்ப கோபக்காரர், அப்படிப்பட்டவருக்கு எப்படி தருவது என்ற ஒரு தயக்கம் இருந்தது, ஒரு வித  அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமிருக்கும், அதனால்தான் அவருக்குத் தரலாம் என்று முடிவு செய்தோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் மண்டலத்தில் மதுரையில் அழகிரிக்கு மாற்றாக வலுவான நிர்வாகிகள் இல்லை என பலரும் விமர்சித்து வரும் நிலையில் மதுரை மூர்த்தியை ஸ்டாலின் முன்னிறுத்துவது  போன்ற அவரின் இந்த பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!