மு.க. ஸ்டாலினுக்கு பொறுப்பே இல்ல... கொரோனா காலத்தில் கொடைக்கானலில் இருப்பதா..? எல்.முருகன் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Apr 18, 2021, 8:47 PM IST
Highlights

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானலில் தங்கியிருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தியது போல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஒற்றுமையுடன் ஒத்துழைக்க வேண்டும். அரசின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நடிகர் விவேக் மரணம் துக்கத்தை ஏற்படுத்துகிறது. சமூக சிந்தனையாளரான நடிகர் விவேக்கின் இழப்பு தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு. ஆனால், நடிகர் விவேக்கின் மரணத்தில் திருமாவளவன் அரசியல் செய்கிறார். திருமாவளவனே இரு முறை  தடுப்பூசியை  போட்டுகொண்டுள்ளார். எனவே, பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் தடுப்பூசி போட்டுள்ளனர். நடிகர் விவேக் தடுப்பூசி போட்ட அன்றைய தினம் 800 பேரும் நாட்டில் முக்கிய தலைவர்கள் பலரும்  தடுப்பூசி போட்டுக்கொண்டனர். எனவே தடுப்பூசி பற்றி பொய் பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம்.
தமிழக எதிர்கட்சி தலைவர் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார். கொரோனா காலங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்காமல் கொடைக்கானலில் தங்கியிருக்கிறார். தாராபுரம் தொகுதியில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றால் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில் பாதை, தொழிற்பேட்டை மற்றும் மகளிர் கலை கல்லூரி அமைக்கப்படும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

click me!