#BREAKING இரவு நேர ஊரடங்கு.. பேருந்து சேவை ரத்து.. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பின் முழு விவரம்..!

By vinoth kumarFirst Published Apr 18, 2021, 7:40 PM IST
Highlights

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா 2வது அலை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இவற்றுக்கெல்லாம் அனுமதி கிடையாது


 * இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை அமல்படுத்தப்படும்.

*  இரவு நேர ஊரடங்கின் போது, தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

* தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.

* மாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேர ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி

* அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம்/ ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

*  இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.  

* கல்லூரி மற்றும் பேராசிரியர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பு எடுக்க அனுமதி

* மாஸ்க் அணியாமல் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டால் தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்கு

பொது

*  நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

*  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*  பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

*  தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*  நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

*  கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

*  கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.

click me!