
காங்கிரஸுடன் தி.மு.க. நெடுங்காலமாக தேர்தல் கூட்டணியில் இருந்தாலும் கூட ஸ்டாலின் மற்றும் ராகுல் இடையே எந்தவித புரிதலும் கிடையாது. சொல்லப்போனால் ராகுலுக்கு தி.மு.க.வின் நட்பே பிடிக்காது.
ஆனால் பா.ஜ.க.வின் அதீத ஆளுமை இவர்கள் இருவருக்கும் இடையிலிருந்த மனக்கசப்பை கழுவி காயவைத்திருக்கிறது. முரசொலி பவளவிழா நிகழ்வுக்காக சென்னை வந்த ராகுல் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்ததோடு, செனடாப் சாலை சென்று ஸ்டாலின் வீட்டிலும் தேநீர் அருந்தினார். ஸ்டாலினின் குடும்பத்தாருடன் அகமகிழ உரையாடி, அவரது பேரக்குட்டிகளை கொஞ்சி மகிழ்ந்தார்.
இதனால் இரு கட்சிகளின் தரப்பிலும் ‘நமது தளபதிகள் நெருங்கிவிட்டனர்!’ என்று மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த சந்தோஷத்துக்கு அமெரிக்கா போய் வேட்டு வைத்திருக்கிறார் ராகுல். கலிபோர்னியா பல்கலையில் நடந்த நிகழ்வில் பேசிய ராகுல் “வாரிசு அரசியல் ஒரு விவகாரமாகவே பார்க்கப்படுகிறது. அரசியலில் மட்டுமல்ல பல் வேறு துறைகளிலும் வாரிசுகள் பதவிக்கு வருவது ஒரு பிரச்னையாகவே உள்ளது.
அதே நேரத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதுதான் நடக்கிறது. நடிகர் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் வாரிசுதான், பிரபல தொழிலதிபர்கள் அம்பானிகளும் வாரிசுகள்தான்.” என்றவர்...
“பிஸ்னஸ், சினிமா என்று மட்டுமில்லை அரசியலிலும் இதை தவிர்க்க முடியாது. தி.மு.க.வின் ஸ்டாலின் ஒரு அரசியல் வாரிசுதான். வாரிசுகள் இந்தியாவில் பதவிக்கு வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் என்னை மட்டும் ஏன் வாரிசு தலைவர் என குறிவைக்கின்றனர் என தெரியவில்லை! சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவும் அரசியல் வாரிசுதான். அவர் முதல்வராக இருந்தாரில்லையா?!” என்று கூறினார்.
கலிஃபோர்னியா போய் கண்ணீர் விடாத குறையாக ராகுல் இப்படி நியாயம் கேட்டிருப்பது தி.மு.க.வினரை சற்றே உரசிப்பார்த்திருக்கிறது. காங்கிரஸிலும், பா.ஜ.க.விலும் ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இப்படி வாரிசு அரசியல் குறித்து இருக்க நம் தளபதியை ஏன் ‘வாரிசு அரசியல் நபர்’ என்று இழுக்க வேண்டும் என பொருமுகிறார்கள்.
அட போங்க பாஸ்! கலிஃபோர்னியா பல்கலையிலேயே நம்ம தளபதி பெயர் எதிரொலிச்சிருக்கேன்னு பெருமை படுவீங்களா! அதைவிட்டுப்போட்டு நொண சொல்லிட்டிருக்கீங்க!