
நீட்டுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக கூறி தனியார் பள்ளிகள் பணவேட்டைக் காடாக மாறி வருவதாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர நீட் என்ற தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு தமிழகம் மற்றும் சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தி முடித்தது.
ஆனால் தமிழக மக்கள் நீட்டை தொடர்ந்து எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நீதிமன்றம் வரை சென்று மருத்துவ கலந்தாய்வுக்கு இடைக்கால தடை வாங்கினர்.
ஆனால் அனைத்து எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நீட் அடிப்படையிலேயே மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது.
இதனால் தமிழகத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நீட்டுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக கூறி தனியார் பள்ளிகள் பணவேட்டைக் காடாக மாறி வருவதாக, குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியைச் சேர்ந்த நிறுவனங்கள், தமிழக மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுடன் கூட்டணி அமைத்து, நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்குக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட்டும் நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.