
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,டாஸ்மாக் கடைகளை திறப்பதில் காட்டும் அக்கறையை பொது மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதிலும் காட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அத்தொகுதியின் எம்எல்ஏ மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.அப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைகள குறித்து பொது மக்களிடம் கேட்டறிந்தார். மேலும் கௌதமபுரம், யுனைடெட் காலனி பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசு மக்கள் பிரச்சனைகள் குறித்து கவலைப்படுவதே இல்லை என குற்றம்சாட்டினார்.
அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதே, தற்போது மத்திய அரசு குறித்து யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதற்கு காரணம் என தெரிவித்தார்.
தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸை தான் விமர்சனம் செய்து வருவதாக குறிப்பிட்ட , அவர் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரனையை நடத்த உத்தரவிடாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மின் விபத்துகளை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறப்பதில்தான் தமிழக அரசு அதிக அக்கறை காட்டுவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதிலும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.