
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் புதுக்கோட்டை மாவட்டமே வறட்சியாகிவிடும் என்றும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்றும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்பகுதி மக்கள் கடந்த 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் மக்கள் விரும்பினால் மட்டுமே செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்தாலும் திட்டத்தை ரத்து செய்வதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த போராட்டக்காரர்கள் அதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில் முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.
இதனிடையே போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நெடுவாசலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
கொட்டும் மழையில் போராட்டகாரர்களிடையே பேசிய ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் திமுக எம்பிக்கள் டெல்லி சென்று இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு தரும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாதது வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் போராட்டம் போன்றவற்றில் திமுக எந்தவிதத்திலும் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபடாது என தெரிவித்தார்.
இத்திட்டம் குறித்து சட்டப்பேரவையை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.