
அதிமுக உடையாமல் இருக்க ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா செயல்பட வேண்டும் என மாபா பாண்டியராஜன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக அதிமுக செயல்படுகிறது. இதில், அதிமுக பிளவுபட்டு தொண்டர்கள் பிரிந்துள்ளனர்.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ‘தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதனால், அதிமுக தொண்டர்கள் 3 அணியில் எந்த அணியில் சேருவது என புரியாமல் குழப்பம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படுகிறது. இதில், எங்கள் அணிக்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு பெருமளவு உள்ளது. அதே நேரத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் ஆதரவு கிடைத்து வருகிறது.
எங்களது நோக்கம் சசிகலாவிடம் கட்சி போக கூடாது. அதே கொள்கையை தீபாவும் கொண்டுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கிறோம். தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை எங்கள் அணிக்கு வரவேற்கிறோம்.
ஏற்கெனவே இரு கரங்களாக நாங்கள் (ஓபிஎஸ், தீபா) செயல்படுவோம் என மறைந்த ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா கூறினார். தற்போது அதை நினைவு கூருகின்றோம். எங்களைப் பொருத்தவரையில் ஒரே இயக்கமாக அதிமுக செயல்பட வேண்டும்.
அதிமுகவை சேர்ந்தவர்கள் தீபாவுக்கு ஆதரவு தருகிறார்கள். தீபாவும் அதிமுகவை சேர்ந்தவர்தான். தீபா உள்பட அனைவரும், ஓ.பி.எஸ். அணியில் செயல்பட்டால், அதிமுகவை மீட்டெடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.