
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவில் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணி என இரு அணிகள் செயல்படுகின்றன. சசிகலா தலைமையில் அதிமுக செய்ல்படுவதை தொண்டர்கள் விரும்பவில்லை.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும்படி அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தினர். தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் திரண்டனர். இதனால், அதிமுகவில் சிறிது சறுக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து தீபா, தனி கட்சி தொடங்குவதாக அறிவித்தார். இதனால், அதிமுக தொண்டர்களின் ஆதரவு அவருக்கு பெருகியது. இதைதொடர்ந்து அவர் ‘எம்ஜிஆர், அம்மா தீபா’ பேரவை என்ற அமைப்பை தொடங்கி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படம் கொண்ட கொடியையும் வெளியிட்டார். அதன்பின், நிர்வாகிகள் பட்டியல் வெளியிட்டார்.
நிர்வாகிகள் பட்டியலில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தீபா பேரவையில் சிலர், ஓ.பி.எஸ். அணியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும், வேறு சிலர், தனியாகவே அரசியல் பயணத்தை தொடர வேண்டும் எனவும் கூறுகின்றனர். இதனால் தீபா பேரவையின் தொண்டர்களுக்கு இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தொண்டர்களை சந்திப்பதை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தீபா மேற்கொண்டு வந்தார். மற்ற நாட்களில் சந்திப்பது இல்லை. இதனால், அரசியலில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது என்பது தீபா பேரவைக்கு கேள்வி குறியாக உள்ளது.
மேலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதில், தீபா அணியினர் களம் இறங்கினால், கனிசமான இடங்களை பிடிக்கலாம். அதற்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், அதுபோன்று தீபா எவ்வித செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை.
இதையொட்டி தீபா வீட்டுக்கு தொண்டர்களின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. பேரவை நிர்வாகிகள் மட்டுமே சிலர் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, மூத்த அரசியல் தலைவாகள் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் தொண்டர்களின் கருத்துகளை கேட்டு நிர்வாகிகள் பட்டியலை தயாரிக்க உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தீபா பேரைவை தொண்டர்கள் கூறுகையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிடுவதற்கு, ஏற்ப வேலைகளை செய்ய வேண்டும். அதற்கு தலைமையின் ஆலோசனையும், எங்களது கருத்துகளும் கூறவேண்டும்.
ஆனால், தீபா எங்களை சந்திப்பதே இல்லை. இதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பெரும் குழப்பம் உள்ளது என்றனர்.