
தமிழக சட்டப் பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் அந்தந்த தொகுதி மக்கள் ஊருக்குள் நுழையவிடாமல் துரத்தியடித்து வருகின்றனர்.
அவர்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டி விரட்டி அடிக்கின்றனர். நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் தொகுதிக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த ஆலம்பாடி முருகன் கோவிலில் நடைபெற்ற மணடல பூஜையில் பங்கேற்பதற்காக காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு அங்கு சென்றார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் தனியரசுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரை எதிர்த்து கேள்வி கேட்ட இளைஞர் செல்வ கார்த்தி என்பவரை தனியரசுவும் அவரது ஆட்களும் சரமாரியாக தாக்கினர்.
ஆனால் பொது மக்கள் திரண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.இதனைத் தொடர்ந்து இளைஞரைத் தாக்கிய தனியரசுவை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
ஏற்கனவே காங்கேயம் தொகுதிக்குள் தனியரசுவை பொதுமக்கள் பல இடங்களில் விரட்டியடித்தால் அவர் எங்கு சென்றாலும் அடியாட்களுடன் தான் சென்று வருகிறார்.
செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதால் அதிர்ச்சி அடைந்த தனியரசு புலம்பி வருகிறார். தன்னை எதிர்த்தவர்களை பழி வாங்கும் விதமாக அவர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆலம்பாடியில் தன்னை எதிர்த்துப் பேசி செல்வ கார்த்தி மீது அவர் புகார் அளித்ததன் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.