கைகொடுத்த டெல்டாவுக்கு, அல்வா கொடுத்த ஸ்டாலின்..

By Ezhilarasan BabuFirst Published May 6, 2021, 6:03 PM IST
Highlights

டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 37 இடங்களில்  வென்று திமுக டெல்டா மாவட்டங்களை தனது கோட்டை ஆக்கியுள்ளது. 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் திமுக மட்டும் 125 இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த 8 எம்எல்ஏக்களையும் சேர்த்து 133 எம்எல்ஏக்கள் திமுகவில் உள்ளனர். இந்நிலையில் நாளை முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு எளிமையான முறையில் முதல்வராக பதவி ஏற்கிறார்.  ஸ்டாலின்  பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில்  அமைச்சரவை பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனியர்களுக்கும், புது முகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

துரைமுருகன் சபாநாயகராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நீர்பாசனத் துறை வழங்கப்பட்டுள்ளது. புதுமுகமான  மருத்துவர் எழிலன் சுகாதாரத்துறை அமைச்சராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுமுகங்கலான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என் நேருவுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற குடிநீர் வழங்கல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதில் வினோதம் என்னவென்றால், திமுகவின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதே ஆகும்.

ஜெயலலிதா இருந்தவரை  டெல்டா மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டை என்பது அனைவரும் அறிவோம். ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 41 தொகுதிகளில் 37 இடங்களில்  வென்று திமுக டெல்டா மாவட்டங்களை தனது கோட்டை ஆக்கியுள்ளது. அதாவது வேதாரண்யம், ஒரத்தநாடு, நன்னிலம், விராலிமலை ஆகிய தொகுதிகள் தவிர 37 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின. நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், புதிய மாவட்டமான மயிலாடுதுறையில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் நாகையில் ஆளூர் ஷாநவாஸ் (விசிக) கீழ் வேலூரில் நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர் . அதேபோல மயிலாடுதுறையில் மூன்று சட்டமன்ற தொகுதிகள் உள்ளன அதில், திமுக- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ராஜ்குமார், சீர்காழி தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல பூம்புகார் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நிவேதா முருகன் வெற்றி பெற்றார். திருவாரூர் மன்னார்குடி தொகுதிகளில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சட்டமன்ற தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 

கும்பகோணத்தில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை 20 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியது. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை கடும் போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் என். அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளார்,  50 ஆண்டுகளுக்கு பிறகு பேராவூரணியை திமுக கைப்பற்றியுள்ளது. மற்றொரு டெல்டா மாவட்டமான திருச்சியில் திமுக சார்பில் போட்டியிட்ட மாயவன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியாண்டி வெற்றி பெற்றுள்ளார். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரபாகரன் வெற்றிபெற்றுள்ளார்.

இப்படி டெல்டா மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று அம்மாவட்டங்களை திமுக கோட்டையாக மாற்றியுள்ளனர். ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள அமைச்சரவை பட்டியலில் டெல்டா மாவட்டத்தில் வெற்றிபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய இடம் வழங்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!