
சட்டமன்ற செயல்பாடு மற்றும் நிலைப்பாடு குறித்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முன்கூட்டியே மற்றவர்களுக்கு சொல்வதில்லை என்று, திமுக எம்.எல்.ஏ க்களில் சிலர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
கலைஞர் ஆக்டிவாக இருக்கும்போது, திமுகவினர் என்ன செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து முன் கூட்டியே, தகவல் தெரிவிக்கப்படும். அதற்கேற்ப திமுகவினர் முன்னேற்பாட்டுடன் தயாராக இருப்பர்.
ஆனால், செயல் தலைவர் ஸ்டாலின் அப்படி எதையும் முன்கூட்டி தெரிவிப்பதில்லை. அவருக்கு நெருக்கமான சிலருக்கு மட்டுமே அது தெரியும். மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.
கூவத்தூர் எம்.எல்.ஏ க்கள் வீடியோ தொடர்பான சர்ச்சை, சட்டமன்றத்தில் வெடித்தபோது, நேற்று முன்தினம் சட்டமன்றத்தில், திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததுடன் மறியலிலும் ஈடுபட்டனர்.
ஆனால், வெளிநடப்பு பற்றியோ, மறியல் பற்றியோ திமுக உறுப்பினர்கள் யாருக்கும் முன்கூட்டியே தகவல் சொல்லப்படவில்லையாம். ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலருக்கு மட்டும் அது தெரிந்துள்ளது.
காலையில் சட்டமன்றத்துக்கு வந்த பிறகுதான் இந்த பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டும் என திமுக உறுப்பினர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், அதற்கு தயாராக வரமுடியாமல் போனதாக சிலர் வருத்தப்பட்டுள்ளனர்.
அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்த துரைமுருகன், அங்கிருந்து கிளம்புவதாக சொல்லியும், அவரை ஸ்டாலின் அனுப்பவில்லை. உடல்நிலை பாதிப்பால், அவர் கண்கள் கலங்க ஆரம்பித்த பின்னரே அவர் அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.
ஸ்டாலின் என் இப்படி நடந்து கொள்கிறார்? என்று மூத்த உறுப்பினர்களே வருத்தப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
இதேபோல், கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகளுக்கு ஆதரவாக, திமுக நடந்த மறியல் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன.
போராட்டத்தின் பொது, வெறும் தர்ணா மட்டுமா? மறியல் போராட்டமும் உண்டா? என, திமுக சார்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்ற அவர்கள் குற்றம் சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.