
அரசியலுக்கு வருவது குறித்து, ரஜினி தன்னுடைய முடிவை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனாலும், அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் மற்றவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய நிலையில், திமுகவை மட்டுமே வலுவான கட்சியாக ரஜினி நினைக்கிறார். மற்ற கட்சிகளை அவர் வலுவான கட்சியாக பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.
அதேபோல், பாமக, நாம் தமிழர் கட்சியை தவிர, ரஜினிக்கு எதிராக, யாரும் இதுவரை கருத்து சொல்லவில்லை. எனவே, அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே, ரஜினியோடு கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவே தெரிகிறது.
இந்நிலையில், மக்கள் நல கூட்டணி சிதைந்துள்ளதால், திமுக-அதிமுகவிற்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டிய நிலையில், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
அதே சமயம், திமுக கூட்டணியில் இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தயக்கம் இல்லை என்றாலும், கொங்கு மண்டல திமுக பிரமுகர்களின் எதிர்ப்பு, அதற்கு தடையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இனி விடுதலை சிறுத்தைகள் ஆதரவு இல்லாமல், தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
அதேபோல், ஜெயங்கொண்டத்தில் நேற்று பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால், கருணாநிதி, ஜெயலலிதா விட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்புவார் என்று குறிப்பிட்டார். மேலும், அவர் தனி கட்சி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறினார்.
அதனால், ரஜினி தனி கட்சி ஆரம்பித்தால், அவரோடு கூட்டணி அமைக்க திருமாவளவன் தயாராக இருப்பதாகவே தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.