
ஆளுநரை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும், ஏதோ ஒரு காரணத்தை வைத்து போராட்டம் நடத்துவது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் முதலமைச்சருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றனர்.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மை இழந்து விட்டது என கூறி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மேலும், கடந்த 27 ஆம் தேதி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி. கனிமொழி ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதைதொடர்ந்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் ஆளுநரை சந்தித்து எடப்பாடிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆனால், இதுவரை ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. அவர் பேரவையை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா , ஆளுநரை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும், ஏதோ ஒரு காரணத்தை வைத்து போராட்டம் நடத்துவது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது தெரிவித்தார்.