
நீட் விலக்கு சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு காரணமான மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் அரசாணை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட, ஏழை மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பாதகம் விளைவிப்பதாக அமைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
சமூக நீதி உணர்வுக்கு மாறான, கிராமப்புற மற்றும் அடித்தட்டு மாணவர்களைப் பாதிக்கக்கூடிய இந்தத் தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுப்பிரிவிலும்கூட, தங்கள் விகிதாசாரத்தை விட பலமடங்கு அதிகமான இடங்களை முன்னேறிய வகுப்பினர் அபகரித்துக் கொள்ளும், சமூக அநீதிக்கு தமிழக அரசு உடந்தையாகப் போகிறதா?
இந்தக் குளறுபடிகளுக்குக் காரணமான மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி உள்ளது. நீட் விலக்கு சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.