
நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளில் தமிழக அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்து வருவதாகவும் இது அதிகார துஷ்பிரயோகம் எனவும் கடுமையாக குற்றம்சாட்டிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜிஎஸ்டி என்ற பெயரில் வரிகளை எல்லாம் மத்திய அரசே வாங்கிக் கொண்டால் தமிழ்நாடு என்ன பிச்சை எடுக்கவா செய்யும் என கொந்தளித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை கொண்டு வந்தவர்கள் திமுகவும், காங்கிரசும் தான் என குற்றம்சாட்டினார். மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில் கல்வி அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆனால் இதில் மத்திய அரசு தலையிட்டு நீட் தேர்வுகளை நடத்துவது மாநில அரசின் உரிமைகள் மீது கைவைப்பதாகும் என குற்றம்சாட்டினார்.
தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்தற்கு எதிரானது என்றும் மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருவாதாகவும் தம்பிதுரை தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் அனைத்து வரிகளையும் மத்திய அரசே வாங்கிக் கொண்டால் தமிழ்நாடு பிச்சை எடுக்கவா முடியும் என கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே தமிழகத்திற்கு வர வேண்டிய நிவாரணத் தொகையை இன்னும் மத்திய அரசு தராமல் இழுத்துதடித்துக் கொண்டு வருவதாகவும் தம்பிதரை குற்றம்சாட்டினார்.