
பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டும்தான் காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியும் என்றும் காமராஜர் ஆட்சியை வேறு எந்த கட்சியும் கொண்டுவர தகுதியில்லை என்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 115-வது பிறந்த நாள்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை, தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு சென்ற பாமக நிறுவனர் ராமதாஸ், அங்குள்ள காமராஜரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான கல்வி தமிழகத்தில் விலைபேசி விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கல்வி சமுதாயத்துக்கு முக்கியமானது என்பதை உணர்ந்தவர் காமராஜர். பாட்டாளி மக்கள் கட்சியால் மட்டுமே காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். வேறு எந்த கட்சியும் காமராஜர் ஆட்சியை கொண்டுவர தகுதியில்லாதவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.