
மக்கள் எங்கள் பக்கம் என்று மத்திய அரசும் மாநில அரசும் கூறி வருகின்றன, ஆனால் ரூபாய் நோட்டு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் வங்கிகள் பக்கம் செல்கிறார்கள் என மனித சங்கிலியில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் கடந்த 16 நாட்களாக பொதுமக்கள் வங்கி வாயிலில் கத்துகிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்தியா முழுதும் முற்றிலுமாக தொழில் வணிகம் அத்தனையும் முடங்கி போனது.
இதையடுத்து பல்வேறு எதிர்கட்சிகள் இதை கண்டித்தன. திமுகவும் டெல்லியிலும் , தமிழகத்திலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. திமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடந்தது. தமிழகம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் புரசைவாக்கம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மனித சங்கிலியை பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கருப்பு பணத்தை ஒழிப்பதாக செல்லாத நோட்டு அறிவிப்பு அறிவித்தாலும் பொதுமக்களை , சிறு சிறு வியாபாரிகளை அதிகம் பாதித்துள்ளது. அதற்காக தான் இந்த மனித சங்கிலி.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதை வங்கியில் கூட சில்லறை தர முடியாத நிலை உள்ளது.
500 மற்றும் 1000 க்காக மணிக்கணக்கில் வங்கியிலும் ஏடிஎம் களிலும் மக்கள் காத்து கிடக்கும்
நிலை உள்ளது. மத்திய அரசு 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் வகையில் செய்துவிட்டு அமல் படுத்தியிருந்தால் இத்தனை பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது. கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் எனபதில் மாற்றுகருத்தில்லை என்றாலும் இந்த நடவடிக்கையால் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் , சாதாரண பொதுமக்கள் வங்கிகள் முன்பு ஆளாய் பறக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையை போக்க பாராளுமன்றத்திலும் , மாநிலங்கவையிலும் பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும். இன்று மக்கள் என் பக்கம் மக்கள் என் பக்கம் என்று மத்தியில் இருக்கின்ற அரசும் , இந்த பிர்ச்சனையில் வாடும் தமிழக மக்களை ஆளும் அரசும் பேசுகிறார்கள் ஆனால் மக்கள் பணத்தை மாற்ற வங்கிகள் பக்கம் சென்று கால் கடுக்க நிற்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.