மத்திய அரசை கண்டித்து அடுத்த போராட்டம் அறிவித்தார் கருணாநிதி..!!!

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
மத்திய அரசை கண்டித்து அடுத்த போராட்டம் அறிவித்தார் கருணாநிதி..!!!

சுருக்கம்

மத்திய அரசை கண்டித்து தீவிரமாக களமிறங்கியுள்ள திமுக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில் அடுத்த போராட்டத்தை அறிவித்துள்ளார் கருணாநிதி.

பிரதமர் மோடி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது முதல் கடந்த 16 நாட்களாக பொதுமக்கள் வங்கி வாயிலில் கத்துகிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்தியா  முழுதும் முற்றிலுமாக தொழில் வணிகம் அத்தனையும் முடங்கி போனது. 
இதையடுத்து பல்வேறு எதிர்கட்சிகள் இதை கண்டித்தன. திமுகவும் டெல்லியிலும் , தமிழகத்திலும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. திமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உடனடியாக அடுத்த கட்ட போராட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னேற்பாடு  எதுவுமின்றி,திடீரென அறிவித்து  16 நாட்களாகியும்,  பணத் தட்டுப்பாடு பிரச்சினை சிறிதும் தணிந்த  பாடில்லை.  விளிம்பு நிலை, ஏழையெளிய,நடுத்தர வகுப்பினர், விவசாயிகள், மீனவர்,நெசவாளர்கள், சிறு வணிகர்கள் போன்றோர்  அனுபவிக்கும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் அளவில்லை.   
அத்தி யாவசிய பொருள்கள்  கூட வாங்க முடியாத நிலையில்,  பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். வாசல்களில் பல மணி நேரம் காத்துக் கிடக்கின்றனர்;அவர்களில் இதுவரை 75 பேர்  மரணமடைந்த சோகமும்  அரங்கேறியிருக்கிறது.   

பிரதமர் மோடியின் பிடிவாதத்தினால், கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய  நிலையில், இந்தப் பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துள்ள எதிர்க் கட்சியினர் அனைவரும்  மத்திய அரசுக்கு எதிராக ஓரணியில் நின்று போராடி வருகின்றார்கள்.

 பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி வரும் எதிர்க் கட்சிகள்,வாக்கெடுப்புடன் கூடிய ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்து அதனை அவையிலே விவாதிக்க வேண்டுமென்றும், கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைத்து விசாரணை நடத்திட வேண்டுமென்றும்  கோரிக்கை வைத்து வலியுறுத்தி வருகிறார்கள்.  

மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்திட  எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.   அதில் முதலாவதாக,  பாராளுமன்ற வளாகத்தில்“தர்ணா” போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்து, அவ்வாறே நேற்றையதினம்  “தர்ணா” போராட்டம்  நடந்துள்ளது.  

அதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, மூத்த காங்கிரஸ் தலைவர்களான  ப. சிதம்பரம், ஜனார்த்ன திவிவேதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரினாமுல் காங்கிரஸ் தலைவர்  டெரிக் ஓபிரையன்,ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் டி. ராஜா,  தி.மு. கழகத்தின் சார்பில் மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழி,  திருச்சி சிவா,டி.கே.எஸ். இளங்கோவன், ஆலந்துhர் பாரதி,அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். 

எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகப்  போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது,   மத்திய அரசின் சார்பில் பதிலளித்த  தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு,டெல்லியில்  ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அரசாங்கத்தின் முடிவு எந்த நிலையிலும் வாபஸ் பெறப்பட மாட்டாது. 

எந்தவொன்றையும் திரும்பப் பெறுவது என்பது மோடியின் ரத்தத்திலேயே  கிடையாது”என்று எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்திடும் வகையில் கூறியிருப்பது, “ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்  தாழ்ப்பாள் போடுவது” போன்ற இறுக்கமான சூழ்நிலையைத் தான்  ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசின் இந்தக் கடுமையான  நிலை குறித்து நேற்றையதினம்“தர்ணா” போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வரும்  28ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள்.  
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில்  வரும்  28ஆம் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்,மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால்  மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில்“பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்”  நடத்துவது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது. 

அனைத்துப் பிரிவு மக்களின் ஒத்துழைப்புடன்,  கழகத் தோழர்கள் அனைவரும்  அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு,  மத்திய   பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத  முடிவுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்று அன்புடன்  கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!