
கோவையில் சிபிஎம் அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டுவீச்சிற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கோவை, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான கே.ரமணி நினைவகம் உள்ளது. இன்று காலை சி.பி.எம்., அலுவலகம் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை அடுத்து, அங்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
கோவை சிபிஎம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் திமுக பொது செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிபிஎம் அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.