
குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்றும் அத்தகைய பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் திமுக ஆதரிக்கும் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
வரும் ஜுலை 25 ஆம் தேதியுடன் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
பாஜக அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் ஒரு வேட்பாளரை நிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு குடியரசுத் தலைவரை நியமிக்க முயற்சி செய்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் சோனியா காந்தியையும், சீத்தா ராம் யெச்சூரியையும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவரை திமுக ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் விலை பேசப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழக அரசு பாஜக கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட கனிமொழி, இந்த அரசை பாஜ இயக்குகிறது என்பது அனைவருக்கும் கண்கூடாக தெரிகிறது எனவும் கூறினார்.