இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் அன்னக்கே அதை செய்ய சொன்னேன்!! கொதித்தெழுந்த ஸ்டாலின்

First Published May 1, 2018, 4:00 PM IST
Highlights
stalin condemns admk government


குட்கா முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சிப்பதாகவும் அதை தட்டிக்கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவது கண்டனத்திற்குரியது என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த விவகாரத்தில், ஒளிவுமறைவற்ற வெளிப்படையான சோதனை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி அறவழிப் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பொய் வழக்குப் பதிவு செய்து, கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் சிங்காநல்லூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான நா.கார்த்திக்கை கைதுசெய்ய தேடுதல்வேட்டை நடத்திக் கொண்டிருப்பதற்கும் அதிமுக அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்கா ஊழலில் சிக்கிக் கொண்டுள்ள அதிமுக அமைச்சரை காப்பாற்றுவதோடு, தமிழக டி.ஜி.பி. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும், கண்ணம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் தளபதி முருகேசன், திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ், இளைஞரணியைச் சேர்ந்த சுரேஷ், சண்முகம் உள்ளிட்ட ஏழு பேரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள், அந்த சிபிஐ விசாரணையை சீர்குலைத்து திசைதிருப்பும் விதத்தில் இதுபோன்றதொரு அராஜக நடவடிக்கையை எடுக்க, கோவை காவல்துறையினருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நடைபெற வேண்டிய சிபிஐ விசாரணைக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் அழிக்கும் முயற்சி.

ஏற்கெனவே, குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை, தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை. ஊழலில் சம்பந்தப்பட்ட இன்னொரு டிஜிபி ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். இப்போது குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் இதுபோன்ற உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகளும், திட்டமிட்டு உண்மைகளை மறைக்க நடைபெறுகின்றன. தட்டிக்கேட்கும் பிரதான எதிர்க்கட்சி மீதே பொய் வழக்குப்போட்டு கைதுசெய்யும் அத்துமீறிய நடவடிக்கையில் அதிமுக அரசும், அதன் டிஜிபியும் ஈடுபடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, பொறுத்துக் கொள்ளவும் முடியாது.

இதுபோன்று வழக்கு விசாரணையை முடக்க சூழ்ச்சி செய்வார்கள் என்பதால்தான் தீர்ப்பு வெளிவந்தவுடன் டிஜிபியும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். ஆகவே, அறவழியில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதோடு, கைது செய்யப்பட்ட திமுகவினர் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!